மீன் ஆலைகளை மூடக் கோரி 300ஆவது நாளாக போராட்டம்

X
பொட்டலூரணி அருகே உள்ள மீன் பதப்படுத்தும் ஆலைகளை மூடக் கோரி, அப்பகுதி மக்கள் 300ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி அருகே மீன்களை பதப்படுத்தி அரவை செய்யும் 3 ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் நச்சுப் புகையினால் கண் எரிச்சல், மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், நுரையீரல் பாதிப்பு, இதய பாதிப்பு போன்றவை ஏற்படுவதாக கூறப்படுகிறது. மேலும், அங்குள்ள விவசாய நிலங்களில் வேலை செய்ய ஆள்கள் வர மறுக்கின்றனர். இந்த ஆலைகளின் கழிவுநீரை டேங்கர் லாரிகளில் கொண்டுவந்து ஊர் குளங்களிலும், ஓடைகளிலும் இரவு நேரங்களில் கலப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இது தொடர்பாக கடந்த 4 ஆண்டுகளாக தொடர்புடைய அரசு அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். எனவே கடந்த 2024 மக்களவைத் தேர்தலை ஒட்டுமொத்த மக்களும் புறக்கணித்தனர். போராட்டத்தின் தொடர் நடவடிக்கைகளில் நாள் கூடல், மாதக் கூடல் நிகழ்ச்சிகளையும் நடத்திவருகின்றனர். அந்த வகையில் 300 ஆவது நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. போராட்டக் குழு பொறுப்பாளர் சண்முகம் தலைமை வகித்தார். தமிழ்த் தேசியப் பேரவை பொறுப்பாளர் மணிமாறன் முன்னிலை வகித்தார். பொறுப்பாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். மக்கள் அதிகாரத்தின் பொதுச் செயலாளர் வெற்றிவேல் செழியன் சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில், மீன் ஆலைகள் மூடப்பட வேண்டும், பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
Next Story

