தமிழ்நாட்டில் சர்வதேச தரத்தில் 300 சுற்றுலா தலங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

X
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்கள் மூலம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சேலத்தில் நேற்று நடந்தது. தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் பொன்குமார், மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்து கொண்டு பேசியதாவது:- மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி, தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை 10 நல வாரியங்களும், அதன்பிறகு 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை 6 நலவாரியங்களையும் ஏற்படுத்தினார். நல வாரியத்தில் பதிவுபெற்ற தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, இயற்கை மரணம், ஈமச்சடங்கு, விபத்து மரணம், விபத்து ஊனம், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட பலன்களும், பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி திட்டம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பதிவு பெற்ற பெண் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சொந்தமாக ஆட்டோ வாகனம் வாங்குவதற்கு ரூ.1 லட்சம் மானியம், தொழிலாளர்கள் பணியிடத்தில் விபத்து மரணம் ஏற்பட்டால் இழப்பீட்டு தொகையை ரூ.5 லட்சத்திலிருந்து தற்போது ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் சுற்றுலாத்துறைக்கென தனி சுற்றுலாக்கொள்கையினை கடந்த 2023-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள 300 சுற்றுலாத்தலங்களை சர்வதேச தரத்தில் உயர்த்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் அதிக நிதி ஒதுக்கீடு செய்து சுற்றுலாத்துறைக்கான நிறைய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக பேக்கேஜ் சுற்றுலா திட்டம் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இவ்வாறு அமைச்சர் பேசினார்.
Next Story

