நான்கு கிராமங்களைச் சேர்ந்த சுமார் 3,000 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்லும் கொட்டக்குடி ஆற்றுப் பாதையில் பாலம் கட்டித் தர விவசாயிகள் கோரிக்கை

கோரிக்கை
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள கோடாங்கிபட்டி வளையப்பட்டி ஒத்தவீடு மஞ்சுநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கொன்றமற்ற ஓடை பாதை வழியாக கொட்டக்குடி ஆற்றை கடந்து சென்று அப்பகுதியில் உள்ள 3000க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களில் மாங்காய் தென்னை வாழை காய்கறிகள் பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகி போடி வழியாக இந்த பகுதியை கடந்து செல்லும் கொட்டக்குடி ஆற்றை நீர்வரத்து இல்லாத போது சுலபமாக பயன்படுத்தும் விவசாயிகள் மழைக்காலங்களில் நீர்வரத்து அதிகரிக்கும் நேரத்தில் ஆற்றைக் கடக்க முடியாமல் விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாமல் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். தொடர் வெள்ளப்பெருக்கு நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக விவசாய நிலங்களில் விளைவிக்கப்பட்ட பொருட்களை எடுத்து வர முடியாமல் பலமுறை நஷ்டப்பட்டுள்ளதாக வேதனையுடன் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தொடர் சிரமங்களை அனுபவித்து வரும் விவசாயிகள் கொட்டகுடி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டித் தர தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு வழங்கியும் பாலம் கட்டி தர முன் வராத காரணத்தினால் விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து சுமார் 10 லட்சம் ரூபாய் வரை நிதி திரட்டி தற்காலிக தரைப்பாலம் அமைத்துள்ளனர். அரசு செய்ய வேண்டிய வேலையை விவசாயிகளாக ஒன்றிணைந்து தரைப்பாலம் அமைத்து இருப்பது வேதனைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இருந்தபோதும் இந்த விவசாயிகளின் ஒன்றுபட்ட தரைப்பாலம் கட்டும் முயற்சி அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது. இந்த தரைப் பாலத்தை சாதாரண நீர் வரத்து இல்லாத காலங்களில் பயன்படுத்தும் நிலையில்தான் உள்ளது மழைக்காலங்களில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படும் நேரங்களில் இந்த பாலத்தை பயன்படுத்த முடியாத நிலைதான் உள்ளது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அனைத்து காலங்களிலும் ஆற்றைக் கடந்து சென்று விவசாயம் செய்வதற்காக அரசு இந்த ஆற்றின் குறுக்கே பாலம் கட்டித் தர வேண்டும் என பலமுறை மனு அளித்துள்ளதாகவும் விவசாயிகளின் வேதனைகளை அறிந்து மாவட்ட நிர்வாகம் பொதுப்பணித்துறையினர் பாலம் கட்டுவதற்கு முன் வர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story