பேராவூரணி அருகே உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் பெறாத குடிநீர் ஆலைக்கு சீல்....  3000 லிட்டர் குடிநீர் பறிமுதல் 

ஆய்வு
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உணவுப் பாதுகாப்புத் துறையின் உரிமம் பெறாத குடிநீர் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டு, தரமின்றி தயாரித்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரம் லிட்டர் குடிநீர் பறிமுதல் செய்யப்பட்டது.  தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் உத்தரவின் படி, உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் விஜயலலிதாம்பிகை தலைமையில், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் ரஹிமுனிசா, வேல்முருகன், சந்திரமோகன், பாலமுருகன், மதன்குமார், சுப்பிரமணியன் மற்றும் ரெங்கராஜ் ஆகியோர் கொண்ட குழு பேராவூரணி அருகே உள்ள ஒட்டங்காட்டில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் நிறுவனத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.  ஆய்வின் போது குடிநீர் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமம் காலாவதியாகி இருந்ததோடு,  உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள நெறிமுறைகளை கடைபிடிக்காமல் செயல்பட்டது  தெரியவந்தது.  இதையடுத்து முறையற்ற வகையில் சுத்திகரிக்கப்பட்டு விற்பனைக்காக வைத்திருந்த 3,000 லிட்டர் அளவிலான அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டில்களை பறிமுதல் செய்த உணவுப் பாதுகாப்பு துறையினர் நிறுவனத்தை மூடி சீல் வைத்தனர்.  இது குறித்து உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் விஜயலலிதாம்பிகை தெரிவித்தது,  தஞ்சை மாவட்டத்தில் குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்கள் உணவுப் பாதுகாப்பு துறையின் கீழ்க்கண்ட நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்கள் மூன்றாம் தர தணிக்கை செய்ய வேண்டும். முழுமையான தண்ணீர் சுத்திகரிப்பு முறையைப் பின்பற்றி, தண்ணீர் சுத்தமாக இருப்பதை உறுதி செய்த பின் விற்பனைக்கு அனுப்ப வேண்டும்.  நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்கள் தன் சுத்தம் கடைபிடிக்க வேண்டும். பணியாளர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்து மருத்துவ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்,  பணியாளர்கள் பணிபுரியும் போது தலையுறை, கையுறை அணிந்து பணிபுரிய வேண்டும். தரை மட்ட குடிநீர் தொட்டிகளை முறையாக பராமரித்து, குறைந்தது மாதத்துக்கு ஒரு முறையாவது குடிநீர் தொட்டியை சுத்தப்படுத்தி அதனை பதிவேடுகளில் பதிவு செய்ய வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தங்களால் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படும் குடிநீரை தரம் உயர்த்தப்பட்ட ஆய்வுக் கூடத்தில் பரிசோதனை செய்து அதன் ஆய்வு அறிக்கையை பதிவேற்றம் செய்ய வேண்டும். உற்பத்தி செய்த அடைக்கப்பட்ட குடிநீரை உற்பத்தி நிறுவனத்திலுள்ள ஆய்வகத்தில் பரிசோதனை செய்யாமல் விற்பனைக்கு அனுப்பக்கூடாது.  மீண்டும் பயன்படுத்தக்கூடிய 20 லிட்டர் குடிநீர் கேன்களை அதிகமுறை பயன்படுத்தும் போது அதன் பிளாஸ்டிக் தன்மை மாறி அதில் உள்ள மைக்ரோ பிளாஸ்டிக் தண்ணீரில் கலந்துவிடும் அபாயம் உள்ளதால், 20 லிட்டர் குடிநீர் கேன்களில் 85 சதவீதம் ஒளி ஊடுருவும் தன்மையுடனும்,  வெளிப்படைத் தன்மையுடன் தூய்மையாக இருந்தால் மட்டுமே குடிநீரை நிரப்பப்பவேண்டும்.  குறிப்பாக குடிநீர் கேன்களில் உள்ள மூடிகள் சீல் செய்யப்பட்டு,  அழியாத மையில் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி வீசப்படும் சிறிய வகை குடிநீர் பாட்டில்களில் குடித்துவிட்டு கசக்கி போட வேண்டும் என்ற வாசகம் இடம் பெற்றிருக்க வேண்டும்.   வாகனங்களில் குடிநீர் கேன்களை எடுத்து செல்லும் போது தார்ப்பாய் போட்டு மூடி நேரடி வெய்யில் படாமலும், தூசி மாசுபாடின்றியும் பாதுகாப்புடன் எடுத்து செல்ல வேண்டும். உணவு பாதுகாப்பு துறை சம்பந்தமான புகார்களுக்கு TNFSD செயலி பதிவிறக்கம் செய்ய வேண்டும். உணவு பாதுகாப்புத் துறையின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள உணவு பாதுகாப்பு துறையின் சமூக வலைதளங்களை குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும்" என்றார்.
Next Story