சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 32 முதல்வர் மருந்தகங்கள்

X
சேலம் மாவட்டத்தில் 16 முதல்வர் மருந்தகங்கள், 16 தொழில்முனைவோர் மருந்தகங்கள் என மொத்தம் 32 முதல்வர் மருந்தகங்கள் செயல்பட்டு வருகிறது. சேலம் அம்மாபேட்டையில் செயல்பட்டு வரும் முதல்வர் மருந்தகத்தை கலெக்டர் பிருந்தாதேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:- முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மருந்து, மாத்திரைகள் வழங்கும் நோக்கோடு தமிழகம் முழுவதும் 1,000 முதல்வர் மருந்தகத்தை கடந்த மாதம் (பிப்ரவரி) 24-ந்தேதி திறந்து வைத்தார். 20 முதல் 90 சதவீதம் தள்ளுபடி விலையில் வழங்கப்படுவதால் பொதுமக்களுக்கு இம்மருந்தகம் மிகுந்த பயனுள்ள வகையில் அமைந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 32 மருந்தகங்கள் மூலம் கடந்த 13 நாட்களில் மட்டும் ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பில் மருந்து, மாத்திரைகள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் பொதுமக்களுக்கு ரூ.37 ஆயிரத்து 400 ஆயிரம் மானியத்தில் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. தொழில்முனைவோர்கள் முதல்வர் மருந்தகம் அமைக்க ரூ.3 லட்சம், கூட்டுறவு சங்கங்கள் மூலம் தொடங்கப்படும் மருந்தகங்களுக்கு ரூ.2 லட்சம் மானியமும் வழங்கப்படுகிறது. முதல்வர் மருந்தகத்தின் பயன்பாடுகள் குறித்து பொதுமக்கள் அதிகளவில் அறிந்து பயன்பெறும் வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரப்படுகிறது. முதல்வர் மருந்தகங்களில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து மருந்து, மாத்திரைகள் குறைந்த விலையில் தொடர்ந்து வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story

