ஒரத்தநாடு அருகே ஹவாலா பணம் ரூ.33.04 லட்சம் சிக்கியது

X
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தாடு பகுதிக்கு, தனியார் ஆம்னி பேருந்தில், போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக, காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் பேரில், ஒரத்தநாடு காவல்துறை துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன், ஆய்வாளர் முருகானந்தம், உதவி ஆய்வாளர் குமாரவேல் மற்றும் மணிகண்டன் ஆகியோர் அடங்கிய குழுவினர், வல்லம் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சென்னையில் இருந்து வந்த ஆம்னி பேருந்தை சோதனை செய்தனர். ஆனால் போதைப் பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. இருப்பினும், பேருந்தில் இருந்து இறங்கிய இரண்டு நபர்களை காவல்துறையினர் விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணாகப் பேசியுள்ளனர். இதன் பேரில், காவல்துறையினர் இருவரையும் ஒரத்தநாடு காவல்துறையினர் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், சென்னை ராயபுரத்தை அப்துல் அமீத் மகன் சையத் அலாவுதீன் (46), பாரிஸ் பகுதியை சேர்ந்த ஹபீப் ரகுமான் மகன் ஜாபர் அலி (51),. என்பது தெரியவந்தது. மேலும், சென்னை பாரிஸ் பகுதியில் மொபைல் கடை நடத்தி வரும் இருவரும், வெளிநாடுகளில் இருந்து ஹவாலா பணத்தை விநியோகம் செய்து வருவதை தொழிலாக செய்து வருவதும் தெரியவந்தது. பிறகு, ஒரத்தநாடு பகுதியில் உள்ள ஒருவரிடம் 33.04 லட்சம் ரூபாயை ஒப்படைக்க பணம் வைத்து இருந்ததை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இது குறித்து, காவல்துறையினர் திருச்சி வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். பிறகு ஒரத்தநாடு வந்த வருமானவரித்துறை அலுவலர்கள், ஹவாலா பணம் என்பதை உறுதி செய்து, சையத் அலாவுதீன் மற்றும் ஜாபர் அலி ஆகிய இருவரையும் விசாரணைக்காக திருச்சி அழைத்து சென்றனர்.
Next Story

