போதமலையில் புதுப்பட்டி முதல் கெடமலை வரை ரூ.34.12 கோடி செலவில் அமைக்கப்பட்ட சாலையினை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்த அமைச்சர் எம்பி..

X
Rasipuram King 24x7 |6 Feb 2026 10:07 PM ISTபோதமலையில் புதுப்பட்டி முதல் கெடமலை வரை ரூ.34.12 கோடி செலவில் அமைக்கப்பட்ட சாலையினை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்த அமைச்சர் எம்பி..
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (06.02.2026) சென்னை, தலைமைச் செயலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் நாமக்கல் மாவட்டம், புதுப்பட்டி முதல் கெடமலை வரை ரூ.34.12 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள சாலை மற்றும் ரூ.7.77 கோடி மதிப்பில் முடிவுற்ற 32 கட்டிட பணிகளை திறந்து வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம், கெடமலை அடிவாரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தலைமையில், மாவட்ட வன அலுவலர் திருமதி மாதவி யாதவ், இ.வ.ப., அவர்கள், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.சு.வடிவேல் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் போதமலை சாலையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினார். மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் தெரிவித்ததாவது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை, தலைமைச் செயலகத்தில் புதுப்பட்டி முதல் கெடமலை வரை ரூ.34.12 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள சாலையினை தொடங்கி வைத்ததையொட்டி, இப்பகுதியில் அதன் நேரலை நிகழ்ச்சி மிகசிறப்பாக நடைபெற்றுள்ளது. பல்வேறு இன்னல்களை கடந்து இன்றைய தினம் வெற்றிகரமாக இச்சாலைப்பணியானது நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்பகுதி பழங்குடியின மக்களின் இருள் சூழ்ந்த வாழ்க்கைக்கு ஒளியேற்றப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு, வழியில்லாத இப்பழங்குடியின மக்களுக்கு வழி ஏற்படுத்தி, உங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக இச்சாலை அர்பணிக்கப்பட்டுள்ளது. இச்சாலை பணி என்பது கோரிக்கை அல்ல. மிகப்பெரிய கனவு. அதனை நிறைவேற்றி முழு அர்பணிப்போடு பணியாற்றிய அனைத்து அரசு துறை அலுவலர்களுக்கும் பழங்குடியினர் சார்பாக எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இச்சாலை பணி என்பது சாதாரணமாக அமைக்க இயலாது. நமது மாநிலத்தில் ஒருசில மலைப்பகுதிகளில் தான் இதுபோன்று சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. வனத்துறையில் சிறப்பாக கையாண்டு இச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் வனத்துறையில் பல்வேறு விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனை பின்பற்றி, சாலைக்கான ஒப்புதல் பெறுவது என்பது மிக கடினமான பணியாகும். அனைத்து வசதிகளுக்கும் அடிப்படையானது இந்த சாலை தான். பழங்குடியின மக்களுக்கு மேல்நிலை நீர்தேக்க தொட்டி, பல்நோக்கு மையம், சமுதாய கூடம், குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது. பெரப்பஞ்சோலை பகுதியில் வாழை ஆராய்ச்சி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உங்களின் தேவைகளை ஆராய்ந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் தெரிவித்தார். பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தெரிவித்ததாவது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலி காட்சி வாயிலாக இன்று (06.02.2026) சென்னை தலைமைச் செயலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் ரூ.34.12 கோடி மதிப்பீட்டில் நபார்டு திட்டத்தின் கீழ் புதுப்பட்டி முதல் கெடமலை வரை 9.90 கி.மீ நீளத்திற்கு போதமலையில் சாலையினை திறந்து வைத்து, மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கியுள்ளார்கள். நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் கடல் மட்டத்திற்கு மேல் சுமார் 1100 மீ உயரத்தில் கிழக்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியான போதமலையில் கீழூர் ஊராட்சி அமைந்துள்ளது. இவ்வூராட்சி அமைந்துள்ள போதமலையானது கீழமேல் திசையில் 19.31 கி.மீ நீளமும், தென்வடலில் 9.334 கி.மீ அகலத்துடன் சுமார் 180.263 ச.கி.மீ பரப்பளவை கொண்டதாகும். கீழூர் ஊராட்சியானது, கீழூர், மேலூர் மற்றும் கெடமலை ஆகிய 3 குக்கிராமங்களை உள்ளடக்கியதாகும். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் இம்மலைப்பகுதி குக்கிராமங்களுக்கு இந்நாள்வரை சாலை வசதி இல்லை. சீற்ற மற்றும் கரடுமுரடான மலைப்பாதையில் நடைபயணமாகவே சென்று வருகின்றனர். தங்களுக்கான அவசர மருத்துவ உதவிக்கு சுமார் 11 கி.மீ நடைபயணமாக மலைப்பகுதியில் நடந்துவந்து பின்பு அடிவாரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள இராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் செல்கின்றனர். அவ்வாறு செல்லும்போது முதியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களை "டோலி" கட்டி தூக்கி வந்தே சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. இதனால் முதியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் உரிய காலங்களில் சிகிச்சை பெறமுடியாமல் உயிரிழக்கும் ஆபத்தை எதிர்கொள்கின்றனர். சில நேரங்களில் விஷ பாம்புகள் கடிக்கும் நேர்வில் சிகிச்சைக்கு இராசிபுரம் வர வேண்டியுள்ளதால், கால தாமதத்தின் காரணமாக உயிரிழப்பு அதிகமாக ஏற்படுகிறது. இவ்வூராட்சியில் கீழேர் குக்கிராமத்தில் உள்ள அரசு பழங்குடியினர் குடியிருப்பு (Government Tribal Residential) ஆரம்ப பள்ளியில் 5 குழந்தைகளும், மேலும் கெடமலை குக்கிராமத்தில் உள்ள ஒரு அரசு பழங்குடியினர் குடியிருப்பு (GTR) ஆரம்ப பள்ளியில் 5 குழந்தைகளும் படித்து வருகின்றனர். மேலும் அங்கன்வாடி கெடமலையில் ஒன்றும், கீழேரில் ஒன்றும் செயல்படுகிறது. இவ்வூராட்சியில் உள்ள மாணவர்கள் 6-ஆம் வகுப்பு முதல் உயர்கல்வி வரை பயில அருகில் உள்ள இராசிபுரத்திற்கே சென்று வரவேண்டியுள்ளது. மலையிலிருந்து தினமும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வருவது இயலாதது. எனவே, மாணவர்கள் படிப்பை ஐந்தாம் வகுப்பிற்குமேல் நிறுத்திவிடுகின்றனர். அல்லது படிப்பிற்காக இராசிபுரத்தை சுற்றியுள்ள பகுதிகளுக்கு இடம் பெயர்கின்றனர். இதனால் இம்மலைவாழ் குடும்பங்களின் வாழ்வாதாரம் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகிறது. பொது விநியோக கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்கி கீழேர் குக்கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மக்கள் நடைபயணமாக 10 கி.மீ பயணம் செய்து வெண்ணந்தூர் வட்டாரத்திற்குட்பட்ட கல்லாங்குளம் கிராமத்திற்கு வந்து வாங்கி செல்கின்றனர். மேலூர் குக்கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மக்கள் நடைபயணமாக 12 கிமீ பயணம் செய்து, சேலம் மாவட்டம் பனைமரத்தூப்பட்டி ஊராட்சி ஒன்றிய குள்ளம்பநாயக்கனூதூர் கிராமத்திற்கு வந்து வாங்கி செல்கின்றனர். கெடமலை குக்கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மக்கள் நடைபயணமாக 7 கிமீ பயணம் செய்து புதுப்பட்டி பேரூராட்சி நியாயவிலைக்கடைக்கு சென்று தங்களின் அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்கின்றனர். கீழூர் ஊராட்சியில் உள்ள மூன்று குக்கிராமங்களில் இந்த மலையாளி வகுப்பை சார்ந்த 258 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் காலங்காலமாக இங்கு சிறுதானியங்களை பாரம்பரிய முறையில் பயிரிட்டு வருகின்றனர். மேலும், இங்கு பயிரிடப்படும் சிறுதானிய வகைகள் எவ்வித இரசாயன உரங்களும் இடாமல் இயற்கையான முறையில் பயிர் செய்யப்பட்டுள்ளது. சிறுதானிய உற்பத்தி மேம்படுத்துவதற்கும் பயன்படுத்துவதற்கும் 2023ஆம் ஆண்டை சர்வதேவ சிறுதானிய ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. கீழூர் ஊராட்சி முழுமைக்கும் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் ராகி, கம்பு, சோளம், வரகு, சாமம், திணை உள்ளிட்ட சிறு தானியங்கள் பயிரிடப்படுகிறது. இங்கு பயிரிடப்படும் சிறுதானியங்கள் அதிக தரத்துடன் இருப்பினும் போதிய சாலை வசதிகள் இல்லாதமையால் அருகில் உள்ள சந்தைகளுக்கு எடுத்து சென்று சந்தைபடுத்த இயலாத சூழ்நிலை உள்ளது. இச்சாலையை அமைக்கும்போது இச்சிறு தானியங்களை சந்தைபடுத்தவும் அதிக அளவு உற்பத்தி செய்யவும் வழிவகை ஏற்படுவதோடு, இம்மக்களின் வாழ்வாதாரம் பன்மடங்கு உயரும். மேலும், பணப்பயிர்களான மரவள்ளிக்கிழங்கு, மஞ்சள், வாழை உள்ளிட்ட பயிர்களை பயிரிட வாய்ப்புள்ளது. தேர்தல் சமயங்களில் வாக்குச்சாவடி பொருட்களும் தலைச்சுமையாகவே எடுத்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும், அரசால் அறிவிக்கப்படும் வளர்ச்சிப்பணிகளை செயல்படுத்திடும் பொருட்டு உரிய கட்டுமான பொருட்களை கீழிருந்து மேலே எடுத்து செல்ல போதிய சாலை வசதிகள் இல்லாததால் உரிய காலத்தில் திட்டப்பணிகளை செயல்படுத்த முடியாத சூழ்நிலை நிலவுகிறது. மேலும், பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை கைவிடவேண்டிய சூழ்நிலையுள்ளது. இந்த சாலைகள் அமைவதால் மலையில் வசிக்கும் 258 குடும்பங்களைச் சார்ந்த 1,727 நபர்களுக்கும், மலையில் விவசாயம் செய்துவரும் அடிவாரம் மற்றும் சுற்றுப்புறங்களில் வசித்து வரும் சுமார் 800 குடும்பங்களைச் சேர்ந்த 3,500 நபர்களும் ஆக மொத்தம் 1058 குடும்பங்களைச் சார்ந்த சுமார் 5,000-க்கு மேற்பட்ட மக்கள் நேரடியாக பயன்பெறுவார்கள். எனவே இச்சாலைப்பணிகள் மலைவாழ்மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், சுதந்திரமடைந்த 75 ஆண்டுக்கால கனவு நிறைவேறுவதாகவும் அமைந்துள்ளது. இந்த சாலை பணி என்பது எளிதான பணி அல்ல. எனவே இச்சாலையானது உங்களின் சொத்து. அதனை பராமரிப்பது உங்களின் கடமையாகும். இங்கு தார்சாலை அமைக்கும் வரை, மழை காலத்திலோ அல்ல பிற காரணத்தினாலோ ஏதேனும் மண் அரிப்பு ஏற்பட்டால், பொதுமக்களாகிய நீங்கள் உங்களுக்குள்ளேயே ஒரு குழுவினை அமைத்தும், அல்லது ஊராட்சி அலுவலகத்தில் முறையாக தகவல் தெரிவித்தும் அதனை சரி செய்து பராமரிக்க வேண்டும். பொதுமக்கள் தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டம், விடியல் பயண திட்டம் உள்ளிட்ட திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இங்கு விரைவில் கூட்டுறவு சங்கம், வங்கி, வேளாண்மை விரிவாக்க மையம் அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு கடனுதவிகள் வழங்கப்படும் என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.ராமசாமி, அட்மா குழு தலைவர்கள் கே.பி.ஜெகநாதன் (இராசிபுரம்), ஆர்.எம்.துரைசாமி (வெண்ணந்தூர்), செயற்பொறியாளர் இ.சிவகுமார், உதவி இயக்குநர் (உராட்சிகள்) திரு.பிரபாகரன், மாநில தரக்கட்டுப்பாட்டு அலுவலர்கள் ஆண்டனி சேவியர், முருகானந்தம், உதவி செயற்பொறியாளர் திரு.அழகுராஜா, வன சரக அலுவலர் திருமதி சத்யா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி வனிதா, திருமதி மலர்விழி, உதவி பொறியாளர்கள்,ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள், சாலை ஆய்வாளர்கள், ஒப்பந்தாரர்கள் உட்பட துறைச் சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Next Story
