லஞ்சம் வாங்கிய அதிகாரி 3.5 ஆண்டுகள் சிறை தண்டனை.

X
NAMAKKAL KING 24X7 B |25 April 2025 6:01 PM ISTகுழந்தை தொழிலாளர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ. 4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரி கோர்ட்டில் 3.5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு.
திருச்செங்கோடு நகரைச் சேர்ந்தவர் அம்பேத்கார் (64). இவர் திருச்செங்கோட்டில், தொழிலாளர் துறை அலுவலகத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். அவர் கடந்த 26.11.2010 அன்று, திருச்செங்கோட்டில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனரா என சோதனை நடத்தினார். அப்போது உதயகுமார் (48) என்பவருக்கு சொந்தமான, ஒரு எலக்ட்ரிக்கல் கடையில், 14 வயது சிறுவன், குழந்தை தொழிலாளராக கண்டுபிடித்து பணியில் அந்த இருந்ததை கடை உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கினார்.பின்னர் அந்த கடை உரிமையாளரிடம் நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். கடை உரிமையாளர் பேரம் பேசியதால் ரூ. 4 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இதையொட்டி கடை உரிமையாளர் நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி கடை உரிமையாளர் உதயகுமார், தொழிலாளர் உதவி ஆய்வாளர் அம்பேத்காரிடம் ரூ. 4 ஆயிரம் லஞ்சம் கொடுக்கும்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக அவரைப்பிடித்து கைது செய்து அவர் மீது வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட முதன்மை ஜூடிசியல் விசாரணை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடைபெற்றது. இந்த நிலையில் தொழிலாளர் உதவி ஆய்வாளருக்கு பணியில் இருந்து ஓய்வு பெறும் நிலை ஏற்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் அவருக்கு கண்டிஷன் பேரில் ஓய்வு அளிக்கப்பட்து. தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்றது. 15 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில், நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். அதில் தொழிலாளர் உதவி ஆய்வாளர் அம்பேத்காருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 1,000 அபராதம் தீர்ப்பளிக்கப்பட்டது.
Next Story
