பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 359 மனுக்கள் பெறப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 07 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.54,528 மதிப்பிலான காதொலிக்கருவி, சிறப்பு சக்கர நாற்காலி, திறன்பேசி உள்ளிட்ட உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் வழங்கினார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (30.06.2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சென்று கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார். பின்னர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், 04 காது கேளாதோர் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.3,285 மதிப்பீட்டில் காதொலி கருவிகளையும், காதுகேளாத மற்றும் கண் பார்வையற்ற 02 மாற்றுத்திறனாளிகளுகுகு தலா ரூ.16,199 மதிப்பீட்டில் திறன்பேசிகளையும் (Smart Phone), மேலும் சக்கர நாற்காலி வேண்டி மனு கொடுத்த மாற்றுத்திறனாளியின் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் மனு கொடுத்த 15 நிமிடத்தில் மாற்றுத்திறனாளிக்கு ரூ.8,990 மதிப்பீட்டில் மூளை, முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு சக்கர நாற்காலியும் என மொத்தம் 07 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.54,528 மதிப்பிலான உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். பின்னர் மாண்புமிகு முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள், மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள் மற்றும் கடந்த வாரங்களில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஒரு மாதத்திற்கு மேலாக நடவடிக்கை எடுக்கப்படாத மனுக்களின் விவரங்களையும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விரிவாக ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டுமனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்றவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், கலைஞர் மகளிர் உரிமை தொகைத் திட்டம், கலைஞர் கனவு இல்லம் திட்டம், அடிப்படை வசதிகள் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவும், மாற்றுத்திறனாளிகள் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்திடுமாறும், அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 359 மனுக்கள் பெறப்பட்டது. இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.மு.வடிவேல் பிரபு, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் திரு.சொர்ணராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.சுரேஷ்குமார், ஆதிதிராவிடர் நல அலுவலர் திரு.வாசுதேவன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு.சுந்தரராமன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story





