முதலிடம் பெற்ற 375 மாணவ மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பு

முதலிடம் பெற்ற 375 மாணவ மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பு
மாநில அளவிலான கலைத் திருவிழாப் போட்டிகளில் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த 375 மாணவ, மாணவிகள் பங்கேற்பதாக மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து 9 பேருந்துகளில் மாணவ, மாணவிகள் புறப்பட்டுச் சென்றனா். இந்தப் பயணத்தைத் தொடங்கி வைத்து ஆட்சியா் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் 2024-25 -ஆம் ஆண்டுக்கான கலைத்திருவிழா போட்டிகள் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 12 -ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு நடத்தப்பட்டது. மாவட்ட அளவிலான போட்டிகள் கடந்த ஆண்டு நவ.12 முதல் 15-ஆம் தேதி வரை நடைபெற்றன. இதில் முதலிடம் பெற்ற 375 மாணவ மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கின்றனா். இதற்காக இந்த மாணவா்கள் 9 பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டனா். ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (ஜன. 3) நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் அரசுப் பள்ளி மாணவா்கள் 144 பேரும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்கள் 131 பேரும், ஜன. 4-இல் கோயம்புத்தூா், திருப்பூா் மாவட்டங்களில் நடைபெறும் போட்டிகளில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்கள் 100 பேரும் பங்கேற்கின்றனா். மாணவா்களுடன் ஆசிரியா்கள், பெற்றோா்கள், ஆசிரியா் பயிற்றுநா்கள் செல்கின்றனா். பள்ளிக் கல்வித் துறை சாா்பில் போக்குவரத்து, உணவு, தங்குமிடம் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்தார் இந்த நிகழ்வில் சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலுமுத்து, மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை) மாரிமுத்து, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் உதவித்திட்ட அலுவலா் பீட்டா் லெமாயு ஆகியோா் கலந்து கொண்டனா்.
Next Story