செவிலியர் கல்லூரி திறப்பு விழாவில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது

செவிலியர் கல்லூரி திறப்பு விழாவில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்  பேசியது

சங்கரா செவிலியர் கல்லூரி திறப்பு விழாவில் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது

செவிலியர் படிப்புக்கு வெளிநாடுகளில் அதிகமான தேவை இருக்கிறது,நிர்மலா சீதாராமன் பேச்சு

காஞ்சிபுரம்,செப்.15:

செவிலியர் படிப்புக்கு வெளிநாடுகளில் அதிகமான தேவை இருக்கிறது என மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் காஞ்சிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செவிலியர் கல்லூரி திறப்பு விழாவில் பேசினார்.





காஞ்சிபுரத்தை அடுத்த நல்லூரியில் சங்கர கிருபா கல்வி மற்றும் மருத்துவக்கல்வி அறக்கட்டளை சார்பில் சங்கரா செவிலியர் கல்லூரி திறப்பு விழா நடைபெற்றது.விழாவிற்கு சங்கரா மருத்துவக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் சே. விஸ்வநாதன் தலைமை வகித்தார்.டாட்டா குழுமங்களின் தலைவர் என்.சந்திரசேகரன்,டிசிஎஸ். நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே.கீர்த்திவாசன் ஆகியோர் முன்னிலையுரை நிகழ்த்தினார்கள்.சங்கரா மருத்துவக் குழுமங்களின் தலைமை நிர்வாக அலுவலர் ப.விஜயலட்சுமி வரவேற்று பேசினார்.

விழாவில் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு செவிலியர் கல்லூரி திறப்பு விழாவிற்கான கல்வெட்டினை ரிமோட் மூலம் திறந்து வைத்த பின்னர் பேசியது.

நமது பிரதமர் வெளிநாடுகளுக்கு செல்லும் போதெல்லாம் அங்கு மருத்துவம் பயிலும் இளைஞர்கள் பலரும் இந்தியாவில் போதுமான மருத்துவக் கல்லூரி இல்லை என்று தெரிவித்தனர்.பெற்றோர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை தன் குழந்தைகளை வெளிநாடுகளுக்கு சென்று படிக்க வைக்க செலவழிப்பதை உணர்ந்த பிரதமர் இந்தியாவில் பல மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கினார்.இதனால் கடந்த 10 ஆண்டுகளில் மருத்துவத்துறையில் மாபெரும் புரட்சி நடந்துள்ளது. கடந்த 2014 இல் 387 மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டு தோறும் 51,348 பேர் மட்டுமே படித்து வந்தனர்.தற்போது 731 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கி அதன் மூலம் ஆண்டு தோறும் 1,12,112 பேர் மருத்துவம் படிக்கின்றனர்.

நாடு முழுவதும் இருந்த 150 செவிலியர் பயிற்சிப் பள்ளிகளை கல்லூரிகளாகவும் தரம் உயர்த்தி வருகிறோம். இதற்காக ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.உலகம் முழுவதும் மக்கள் தொகையின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருப்பதால் செவிலியர் படிப்புக்கான தேவையும் அதிகமாக இருக்கிறது.வெளிநாடுகளுக்கு சென்று செவிலியர் வேலை பார்க்க விரும்புவோர் அந்தந்த நாடுகளின் மொழியையும் கற்றுக்கொள்ள வேண்டும்.சிங்கப்பூர்,ஜப்பான்,ஐரோப்பா ஆகிய நாடுகலில் செவிலியர் பணிக்கான தேவை இருக்கிறது.தற்போது மத்திய அரசு 70 வயது நிரம்பிய அனைவருக்கும் ஏழை,பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் ஆண்டுக்கு ரூ.5லட்சம் வரை காப்பீடு மூலம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

செவிலியர்கள் முதலில் தங்கள் உடல் நலத்தை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்,யோகா,தியானம் ஆகியனவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டும்.முக்கியமாக மனதை அலைபாய விடாமலும்,செல்போனில் அதிக கவனம் செலுத்தாமலும் இருக்க வேண்டும் என்றும் பேசினார்.விழாவில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர்,சங்கரா பல்கலையின் துணை வேந்தர் ஸ்ரீநிவாசு,சங்கரா கல்லூரி முதல்வர் கே.ஆர்.வெங்கடேசன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story