குடியாத்தில் மூதாட்டி கொலை வழக்கில் 4 தனிப்படைகள் அமைப்பு

குடியாத்தில் மூதாட்டி கொலை வழக்கில் 4 தனிப்படைகள் அமைப்பு

குற்றவாளி

குடியாத்தத்தில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்க 4 தனிப்படைகளை அமைத்து எஸ்பி மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த சேத்துவண்டை அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் ருத்துராஜ்.இவரது மனைவி சின்னக்குழந்தை (70). நேற்று முன்தினம் அதிகாலை குடியாத்தம் தரணம்பேட்டை பஜார் வீரபத்திரன் தெருவில் அரிசி கடை முன்பு தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டி சின்னக்குழந்தையை,

அப்பகுதியில் சுற்றி திரிந்த ஒருவர் பெரிய பாறாங்கல்லை தலையில் போட்டு கொலை செய்தார். மேலும் அந்த நபர் அப்பகுதியில் நிறுத்தி வைத்திருந்த கார்களின் கண்ணாடியையும் உடைத்துள்ளார்.

இந்த காட்சி அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தது. அவர் கையில் பெரிய கல்லோடு சுற்றியபோது அதனை ஒருவர் வீடியோ எடுத்து, அவரிடம் கேட்டபோது அவரை மிரட்டி சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நபர் குறித்து விசாரணை நடத்தியதில் அவர் குடியாத்தம் தரணம்பேட்டை பஜார் பகுதியில் கடந்த சில வருடங்களாக சுற்றி வந்தததாகவும்,

ஊர், பெயர் தெரியாது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து மூதாட்டி சின்னகுழந்தையின் கொலையில் சம்பந்தப்பட்ட அந்த நபரை பிடிக்க வேலூர் மாவட்ட எஸ்பி மணிவண்ணன் உத்தரவின் பேரில், குடியாத்தம் டிஎஸ்பி ரவிச்சந்திரன், குடியாத்தம் டவுன் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பத்மநாபன் மற்றும் சிலம்பரசன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படையும்,

மாவட்ட எஸ்பி தனிப்படை என 4 தனிப்படை போலீசார், கொலையாளி என சந்தேகப்படும் நபரின் போட்டோவை வைத்து குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பொதுமக்களிடம் புகைப்படத்தை காட்டி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தனிப்படை போலீசார் ஆந்திர மாநிலம் சித்தூர், பலமநேர், புங்கனூர், வி.கோட்டா,

குப்பம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று அங்குள்ள பொதுமக்களிடம், அந்த நபரின் புகைப்படத்தை காட்டி விசாரித்து வருகின்றனர். அதேபோல் குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ரயில் நிலைய பகுதிகளில் தங்கியுள்ளவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story