அனுமதி இன்றி பட்டாசு தயாரித்த 4பேர் கைது : வெடிமருந்துகள், சரக்கு வாகனம் பறிமுதல்!
Thoothukudi King 24x7 |29 Oct 2024 10:19 AM GMT
எப்போதும்வென்றான் பகுதியில் அரசு அனுமதி இன்றி சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
எப்போதும்வென்றான் பகுதியில் அரசு அனுமதி இன்றி சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நேற்று எப்போதும்வென்றான் காவல் நிலைய ஆய்வாளர் முருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் அந்தோணி திலிப் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது எப்போதும்வென்றான் அருங்குளம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் கார்த்திக் (27) என்பவருக்கு சொந்தமான அதே பகுதியில் உள்ள கோழிப் பண்ணையை சோதனை செய்தனர். அப்போது அங்கு விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை சங்கரபணியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்களான தேவராஜ் மகன் கருப்பசாமி (38), பொன்னுசாமி மகன் சதீஷ்குமார் (27) மற்றும் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த லட்சுமணன் மகன் பிரதீப்குமார் (29) ஆகியோர் அரசு அனுமதி மற்றும் பட்டாசு தயாரிப்பதற்கான உரிமமன்றி சட்டவிரோதமாக வெடிமருந்து பொருட்களை வாங்கி விற்பனைக்காக பட்டாசுகள் தயாரிப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கார்த்திக், கருப்பசாமி, சதீஷ்குமார், பிரதீப்குமார் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து பட்டாசுகள் தயாரிக்க தேவைப்படும் சோடியம், சல்பர், அலுமினிய தூள் உட்பட வெடிமருந்து பொருட்களையும், பட்டாசு பொருட்களை சட்ட விரோத விற்பனைக்காக பயன்படுத்திய ஒரு மினி சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து எப்போதும்வென்றான் காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story