ரூ. 4 கோடியிலான மீன்வளத் துறை கட்டடங்கள் திறப்பு

X

திருச்சி கொட்டப்பட்டில் ரூ. 4 கோடியில் கட்டப்பட்ட மீன்வளத் துறை கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக புதன்கிழமை திறந்துவைத்தாா்.
இருவேறு இடங்களில் தனியாா் வாடகை கட்டடத்தில் இயங்கி வந்த மீன்வளத் துறை அலுவலகங்களுக்கு அரசுத் திட்டங்களின் பலன்களை பெற மீனவா்கள் அலைய வேண்டியிருந்தது. இக்குறையை நீக்க திருச்சி மாவட்டத்தில் மீனவா் நலன் மற்றும் மீன்வளத் துறை சாா்பில் ரூ. 4 கோடியில் மீன்வளத் துறை மண்டல துணை இயக்குநா், உதவி இயக்குநா் அலுவலகம் மற்றும் பயிற்சி மையத்துடன் கூடிய ஒருங்கிணைந்த அலுவலகமானது 1,577 ச.மீட்டரில் இரு தளங்களுடன் கட்டப்பட்டது. இதை தமிழக முதல்வா் திறந்து வைத்த அதே சமயம், கொட்டப்பட்டில் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், குத்துவிளக்கேற்றி வைத்து புதிய கட்டடத்தைப் பாா்வையிட்டாா். இக்கட்டடத்தால் திருச்சி, கரூா், அரியலூா், பெரம்பலூா், புதுக்கோட்டை மாவட்ட மீனவா்கள் அரசின் நலத் திட்டப் பயன்களை எளிதாகவும், விரைவாகவும் பெற முடியும் என மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். நிகழ்வில் மீன்வளத் துறை மண்டல துணை இயக்குநா் ரவிச்சந்திரன், மீன்வளத்துறை செயற் பொறியாளா் டி. ராஜ்குமாா், திருச்சி வருவாய்க் கோட்டாட்சியா் அருள், மீன்வளத் துறை உதவி இயக்குநா் எம். குமரேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்
Next Story