சேலத்தில் பணம் இரட்டிப்பு மோசடி வழக்கில் கைதான விஜயாபானு உள்பட 4 பேரின் ஜாமீன் மனு .

X
சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள சிவகாமி திருமண மண்டபத்தில் புனித அன்னை மனித நேய அறக்கட்டளையை வேலூரை சேர்ந்த விஜயாபானு என்பவர் நடத்தி வந்தார். இவர், பணம் இரட்டிப்பு தருவதாக கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டார். இதுகுறித்து சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அறக்கட்டளை நிர்வாகி விஜயாபானு, ஜெயபிரதா, பாஸ்கர், சையத் முகமது ஆகிய 4 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இவர்களது அறக்கட்டளையில் இருந்து ரூ.12.67 கோடி பணம், தங்கம், வெள்ளி, நிலத்திற்கான ஆவணங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுவரை சுமார் 120-க்கும் மேற்பட்டோர் விஜயாபானு மீது புகார் தெரிவித்துள்ளனர். போலீஸ் விசாரணையில் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. இதனிடையே, கைது செய்யப்பட்ட விஜயாபானு உள்பட 4 பேரும் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு கோவை டான்பிட் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அவர்களுக்கு ஜாமீன் வழங்க போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வருகிற 3-ந் தேதிக்கு மனுவை நீதிபதி தள்ளி வைத்தார். அதேபோல், அறக்கட்டளையின் நிர்வாகியான செந்தில்குமார், அவரது மனைவி ஜான்சி ஆகியோரும் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவும் நேற்று விசாரணைக்கு வந்தது. அவர்களது ஜாமீன் மனுவும் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
Next Story

