நகைக்கடையில் கவரிங் நகை கொடுத்து மோசடி - 4 பேர் கைது

X
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் நகைக் கடையில் கவரிங் நகையை கொடுத்து, 5 பவுன் நகைகளை மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை அழகர்நகரைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர், சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் ஜன.27-ம் தேதி அவரது தந்தை ஜெயராமன் இருந்துள்ளார். அப்போது கடைக்கு வந்த 2 பேர், 5 பவுன் பழைய நகைகளை கொடுத்துவிட்டு, 5 பவுன் புதிய நகைகளை வாங்கி உள்ளனர். இதற்கு, செய்கூலியாக ரூ.20 ஆயிரம் கொடுத்துள்ளனர். அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் அந்த நகைகளை ஜெயராமன் பரிசோதித்தபோது, அந்த நகைகள் அனைத்தும் கவரிங் நகை என்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில், திருப்புவனம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில், மானாமதுரை டிஎஸ்பி நிரேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தினர். இதில் நகை மோசடியில் ஈடுபட்டது ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள கரிசல் குளத்தைச் சேர்ந்த திருப்பதி என்ற பாலகிருஷ்ணன்(39), கடலாடி அருகே வெள்ளம் பலைச் சேர்ந்த முனீஸ்வரன்(33), மங்கலத்தைச் சேர்ந்த திசைவீரபாண்டியன்(42), மதுரை தென்றல் நகரைச் சேர்ந்த மாரிமுத்து(41) ஆகிய 4 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story

