சிறுமிக்கு பாலியல் தொல்லை:தறித்தொழிலாளர்கள் 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

X

சேலம் போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை அடுத்த குருக்கப்பட்டி அருகே உள்ள கொன்னேரிவளவு பகுதியை சேர்ந்தவர் அய்யனார். இவருடைய மகன் சிவகுமார் (வயது 21). அதே பகுதியை சேர்ந்தவர்கள் பழனிசாமி மகன் பிரபு (19), ராஜி மகன் தாமரைசெல்வன் (20), பழனிசாமி மகன் வேடப்பன் (40). இவர்கள் 4 பேரும் தறித்தொழிலாளர்கள். இவர்கள் 4 பேரும் சேர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4-ந்தேதி மனநலம் பாதித்த 17 வயது சிறுமியிடம் இட்லி வாங்கி தருவதாக கூறி அங்கு உள்ள சுடுகாட்டு பகுதிக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர்கள் 4 பேரும் சேர்ந்து அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளனர். இதுகுறித்து அந்த சிறுமி பெற்றோரிடம் கூறி உள்ளார். அதன்பேரில் சிறுமியின் தாயார் தாரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தறித்தொழிலாளர்கள் 4 பேரையும் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சேலம் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தறித்தொழிலாளர்கள் சிவகுமார், பிரபு, தாமரைசெல்வன், வேடப்பன் ஆகிய 4 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டார். மேலும் 4 பேரும் இரட்டை ஆயுள் தண்டனையை தனித்தனியே அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 4 பேரையும் போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story