சேலத்தில் போதை மாத்திரைகளை இளைஞர்களுக்கு விற்பனை செய்த 4 பேர் கைது

சேலத்தில் போதை மாத்திரைகளை இளைஞர்களுக்கு விற்பனை செய்த 4 பேர் கைது
X
போலீசார் நடவடிக்கை
சேலம் மாநகரில் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கு ஒரு கும்பல் போதை மாத்திரை ஊசிகளை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் கிச்சிபாளையம் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் இன்று கஸ்தூரிபாய் தெருவில் ரோந்து சென்று கண்காணித்தனர். அதில் போதை மாத்திரைகளுடன் 3 வாலிபர்கள் சிக்கினர். அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்த திரவியம், கௌதமராஜ், கோகுல்ராஜ் என தெரிய வந்தது அவர்களிடம் இருந்து 30 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். தொடர் விசாரணையில் அந்த மாத்திரைகளை சேலம் அரிசி பாளையத்தில் வசிக்கும் கோகுல் என்கின்ற சச்சின் என்பவர் தங்களுக்கு கொடுத்தார் என தெரிவித்தனர்.அதன் பேரில் போலீசார் கோகுலை மடக்கி பிடித்து அவரது வீட்டில் சோதனை செய்தனர். அதில் வீட்டின் மொட்டை மாடியில் 1100 போதை மாத்திரைகள், 15 ஊசி, மாத்திரை கரைக்க பயன்படும் எட்டு மருந்து பாட்டில்கள் இருந்தது. அதனையும் கோகுலின் பைக்கையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து போதை மாத்திரைகளை கோகுல் வாங்கி வந்து ஒரு மாத்திரை 300 ரூபாய் என இளைஞர்கள் பலரிடம் விற்பனை செய்திருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து நான்கு பேரையும் சேலம் கோர்ட்டில் ஆஜர் படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story