இளைஞரிடமிருந்து செல்போனை பறித்துச் சென்ற சிறுவன் உள்ளிட்ட 4 பேர் கைது

X
தஞ்சாவூர் அருகே வல்லம் ஆலக்குடி சாலையில் பைபாஸ் பகுதியில் உள்ள மேம்பாலத்தின் கீழே பைக்கில் சென்ற இளைஞரிடமிருந்து செல்போனை பறித்துச் சென்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் அருகே வல்லம் சவேரியார் கோயில் தெருவை சேர்ந்த பாலசுந்தரம் என்பவரின் மகன் வினோத் (35). இவர் கடந்த 7 ஆம் தேதி இரவு 11:30 மணி அளவில் வல்லம் - ஆலக்குடி சாலை பைபாஸில் உள்ள மேம்பாலத்தின் கீழே தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே பைக்கில் வந்த நான்கு பேர் வினோத்தை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வினோத் வல்லம் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில், காவல் உதவி ஆய்வாளர் முகமது நிவாஸ் மற்றும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் வினோத்திடம் இருந்து செல்போனை பறித்து சென்றது தஞ்சாவூர் கீழ ராஜவீதி பகுதியை சேர்ந்த பாலு என்பவரின் மகன் ஷாம் சுந்தர் (20), களிமேடு பரிசுத்தம் நகர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரின் மகன் பூபதி (18), தஞ்சாவூர் பரிசுத்தம் நகர் பகுதி சேர்ந்த உதயகுமார் என்பவரின் மகன் சரண்குமார் (30) மற்றும் வல்லம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 4 பேர் என்பது தெரியவந்தது இதையடுத்து ஷாம் சுந்தர் உட்பட நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து வினோத்தின் செல்போன் மீட்கப்பட்டது. மேலும்திருட்டு சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது இதில் 17 வயது சிறுவன் தஞ்சையில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
Next Story

