அடுக்குமாடி குடியிருப்புகள் பழுது பார்க்கப்பட்டு 4 மாதத்தில் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்

X
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் கடந்த 1972-ம் ஆண்டு சேலம் குகை நேருநகர், காந்திநகர் பகுதிகளில் 432 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. பின்னர் அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி உத்தரவின் பேரில் ஏழை, எளிய மக்களுக்கு குடியிருப்புகள் வழங்கப்பட்டன. அந்த குடியிருப்புகள் சேதம் அடைந்தன. கடந்த 2019-ம் ஆண்டு அங்கு வசித்த பொதுமக்கள் காலி செய்யப்பட்டனர். 5 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பழுது சரி செய்யவில்லை. இதனால் சரி செய்து தரும்படி அம்பேத்கர் மக்கள் இயக்கம், அங்கு வசிக்கும் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் பல போராட்டங்கள் நடத்தினர். ஆனால் பணிகள் இன்னும் தொடங்கவில்லை. பழுதான வீடுகள் சரி செய்து அங்கு ஏற்கனவே வசித்த மக்களை குடியமர்த்த வலியுறுத்தி அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் சென்னை மெரினா கடற்கரை எதிரே உள்ள தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை என்ஜினீயர் கிருஷ்ணசாமி தலைமையில் சேலம் பெரமனூரில் உள்ள அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் அம்பேத்கர் மக்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மற்றும் அங்கு வசித்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் இது குறித்து தலைமை என்ஜினீயர் கிருஷ்ணசாமியிடம் கேட்ட போது அமைதி பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்டு உள்ளது. மேலும் பழுதான குடியிருப்புகள் சரி செய்யும் பணி தொடங்கப்பட்டு விட்டது. பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு இன்னும் 4 மாதத்தில் உரியவர்களிடம் குடியிருப்புகள் ஒப்படைக்கப்படும் என்று கூறினார்.
Next Story

