விபத்துக் காப்பீடு பணம் ரூ. 4 லட்சத்துக்காக அண்ணன் கொலை: தங்கை, மைத்துனருக்குப் போலீஸ் வலை !

X
விபத்துக் காப்பீடு தொகையான 4 லட்ச ரூபாயை அபகரிக்கும் நோக்கில், தொழிலாளி ஒருவரை அவரது மைத்துனர் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். இந்தக் கொலைக்கு தொழிலாளியின் தங்கையும் உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் நிலையில், தலைமறைவான இருவரையும் மதுக்கரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மதுக்கரை தண்டபாணி தோட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது தாயார் விபத்தில் இறந்தபோது கிடைத்த காப்பீடு தொகையில், மணிகண்டனின் பங்கு 4 லட்ச ரூபாயை அவரது தங்கை அஞ்சுவின் கணக்குக்கு அனுப்பினார். அந்தப் பணத்தை அஞ்சுவும், அவரது கணவர் அஜித்குமாரும் (தஞ்சாவூர்) ஆடம்பரமாகச் செலவழித்துள்ளனர். பணத்தைத் திரும்பக் கேட்ட மணிகண்டனைத் தீர்த்துக்கட்ட அஜித்குமார், அஞ்சு ஆகியோர் திட்டமிட்டனர். சண்டையிடுவதுபோல் நடித்து அஞ்சுவை வீட்டுக்குள் பூட்டிய நிலையில், தங்கையைப் பூட்டி வைத்ததைக் கேட்டு வந்த மணிகண்டனை அஜித்குமார் சரமாரியாகக் கத்தியால் குத்திவிட்டுத் தப்பினார். படுகாயமடைந்த மணிகண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மணிகண்டனின் மற்றொரு சகோதரி அளித்த புகாரின் பேரில், மதுக்கரை போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான மைத்துனர் அஜித்குமார் மற்றும் அஞ்சு இருவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 4 லட்சம் ரூபாய்க்காக நடத்தப்பட்ட இந்தக் கொலை சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story

