வரும் 4ம் தேதி திருச்செங்கோட்டில் தெப்பத்தேர் திருவிழா தேர் கட்டுமான பணிகள் பூஜை செய்து துவக்கம்
Tiruchengode King 24x7 |28 Oct 2025 11:03 AM IST50ஆண்டுகளுக்கு முன்பு நடந்து நிறுத்தப்பட்டிருந்த தெப்பத் திருவிழா 4 ஆண்டுகளாக மீண்டும் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் 4வது ஆண்டாக தெப்பத்தேர் திருவிழா வரும் 4ம் தேதி நடக்க உள்ள நிலையில் தேர் கட்டும் பணிகள் துவக்கம் 160 பேரல்களைக் கொண்டு 30 அடிக்கு 30 அடி அகலத்தில் தேர் அமைக்கும் பணிகள் துவக்கம்
திருச்செங்கோடு வைகாசி விசாக தேர்த்திருவிழாவுக்கு இணையாக ஸ்ரீபெரிய மாரியம்மன், ஸ்ரீசின்ன மாரியம்மன்,அழகுமுத்து மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவின் போது தெப்பத்தேர் விடுவது பாரம்பரியமான வழக்கமாக இருந்தது.1970 வரை தெப்ப தேர் திருவிழா சிறப்பாக நடந்து வந்துள்ளது 1971 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒரு கடுமையான பஞ்சத்தின் காரணமாக தெப்பக்குளம் வறண்டு போன நிலையில் தெப்பத் திருவிழா நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த 50 வருடங்களாக நடைபெறாமல் இருந்த தெப்பத் தேர் திருவிழா கடந்த 2022 ஆம் ஆண்டு மீண்டும் வெகு சிறப்பாக நடைபெற்றது. கொட்டும் மழையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து தெப்பத் திருவிழாவை கண்டு மகிழ்ந்தனர். இந்த தெப்ப தேரில் பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், அழகு முத்து மாரியம்மன், உற்சவமூர்த்திகள் வைக்கப் பட்டு நான்கு குளக்கரைகளிலும்தேர் இழுக்கப்பட்டு ஒவ்வொரு கரையிலும் பூஜைகள் நடத்தப்படும்.அதன்படி இந்த ஆண்டு மாரியம்மன் திருவிழா இன்று 28.10.25 தேதி பூச்சாட்டுதளுடன் தொடங்கி நடக்க உள்ளது. தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள நிலையில் வரும் 4.11.25 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தெப்ப தேர் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. ஈரோடு ரோட்டில் உள்ள தெப்பக்குளத்தில் 160 பேரல்களைக் கொண்டு தெப்பத்தை அமைக்கும் பணி பூஜை செய்து துவக்கி வைக்கப்பட்டது. திருச்செங்கோடு நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு, அர்த்தநாரீஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து, அறங்காவலர்குழு உறுப்பினர் சித்ரா, சின்ன மாரியம்மன் கோவில் விழா குழு தலைவர் முத்து கணபதி, ஊர் கவுண்டர் ராஜா, கொத்துக்காரர் அன்பரசன்,கோவில் நிர்வாகிகள் பாபு சுதாகர் ஆகியோர் பணிகளை பூஜை செய்து துவக்கி வைத்தனர்.30 அடி நீளம் 30 அடி அகலத்தில் அமைக்கப்பட உள்ள இந்த தெப்ப தேரைகடந்த மூன்று ஆண்டுகளாக திருச்செங்கோடு ஸ்ரீ பாதம் தாங்கிகள் குழுவினரே அமைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த தெப்ப தேரில் தேரில் பூ அலங்காரம் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு தெப்பத் திருவிழா நடத்தப்படும் என விழா குழுவினர் தெரிவித்தனர். பொதுமக்கள் பாதுகாப்புக்காக இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது எனவும் அதனை சுற்றிலும் பொதுமக்கள் நின்று பார்வையிடலாம் என்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக செய்யப்பட உள்ளது எனவும் முன்னேற்பாடு நடவடிக்கையாக தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தனர். பல வருடங்களுக்குப் பிறகு தொடர்ந்து நடைபெற தொடங்கியுள்ள தெப்ப திருவிழாவை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு ரசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.செவ்வாய்க்கிழமை நடக்க உள்ள தெப்ப தேர் திருவிழாவை தொடர்ந்து புதன்கிழமை பொங்கல் வைத்தல் வெள்ளிக்கிழமை அம்மன் திருவீதி உலா சனிக்கிழமை கம்பம் பிடுங்கி தெப்பக்குளத்தில் விடுதல் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது.
Next Story


