கட்டுமான தொழிலாளர் நலவாரியம் மூலம் 4 ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்கு ரூ.1,752 கோடி உதவித்தொகை

X
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தின் 41-வது கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு வாரியத்தின் தலைவர் பொன்.குமார் தலைமை வகித்தார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலர் கொ.வீரராகவ ராவ், கட்டுமான தொழிலாளர் நலவாரிய செயலர் கே.ஜெயபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்டுமான தொழிலாளர் நலவாரியம் தொடங்கப்பட்ட நாள்முதல் கடந்த ஜூலை 31-ம்தேதி வரை 27 லட்சத்து 46,572 தொழிலாளர்கள் வாரியத்தில் பதிவு செய்துள்ளதாகவும் ரூ.2,608 கோடி மதிப்பீட்டில் தனிநபர் விபத்து நிவாரணம், விபத்து, ஊனம், இயற்கை மரணம், கல்வி, திருமணம், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், நோய்களுக்கான சிகிச்சைக்கு நிவாரணம் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. புதிதாக 15.74 லட்சம் பேர் பதிவு: மேலும், கடந்த 4 ஆண்டுகளில் 15 லட்சத்து 74,116 பேர் புதிதாக வாரியத்தில் பதிவு செய்துள்ளதாகவும், 20 லட்சத்து 60,600 பேருக்கு பல்வேறு நலத்திட்டங்களின்கீழ் ரூ.1,752 கோடி மதிப்பில் உதவித்தொகை வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் அரசு பிரதிநிதிகள், வேலையளிப்பர் தரப்பு பிரதிநிதிகள், தொழிலாளர்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
Next Story

