தஞ்சாவூர் கோவில் சிலை திருட்டு வழக்கில் 4 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை

X
தஞ்சாவூர், கரந்தை ஜைன முதலித் தெருவில், 600 ஆண்டுகள் பழமையான, ஆத்தீஸ்வரஸ்வாமி என்கிற ஜெயின கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் தேதி இரவு உள்ளே புகுந்த மர்ம நபர்கள், கோவிலில் இருந்த 3 அடி உயரத்தில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட ஆத்தீஸ்வரர் சிலை, வெண்கலத்தால் செய்யப்பட்ட தலா ஒன்றரை அடி உயர ஜினவாணி, ஜோலமணி, அரை அடி உயர நதீஸ்வரர் சிலை, ஒரு அடி உயர பஞ்சநதீஸ்வரர் சிலை, தலா முக்கால் அடி உயர நவக்கிரக தீர்த்தங்கரர், நவ தேவதா சிலைகள், தாமிரத்தில் செய்யப்பட்ட ஒரு அடி உயர 24-ஆவது தீர்த்தங்கரர் சிலை உள்ளிட்ட 23 சிலைகளை திருடி சென்றனர். இது குறித்து 2020 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதி, கோவில் அறங்காவலர் அப்பன்டைராஜன் தஞ்சாவூர் மேற்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், காவல்துறையினர் கடந்த 2020 மார்ச் 7 ஆம் தேதி, தஞ்சாவூர் சுங்கத்திடல் சைவராஜ் மகன் ராஜேஷ் (40), அய்யம்பெருமாள் மகன் ரவி (45), காவேரி நகர் பார்த்தசாரதி மகன் சண்முகராஜன் (48), நாகப்பட்டினம் மாவட்டம் பிரதாபராமபுரம் பகுதியை சேர்ந்த வேணுகோபல் மகன் விஜயகோபால் (37) ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 23 சிலைகளும் மீட்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு மீதான விசாரணை, கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மணிகண்ட ராஜா புதனன்று ராஜேஷ், ரவி, சண்முகராஜன், விஜயகோபால் ஆகிய நான்கு பேருக்கும் தலா ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், இரண்டாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். பிறகு குற்றவாளிகள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினரை சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவின் காவல்துறை கூடுதல் இயக்குநர் கல்பனா நாயக், காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர்ஜிவால் ஆகியோர் வெகுவாக பாராட்டியுள்ளனர்.
Next Story

