கோவை: அரசு பேருந்து கவிழ்ந்து 40 பேர் படுகாயம் !

X
கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று அதிகாலை அரசு பேருந்து ஒன்று 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். திருப்பூரில் இருந்து 72 பயணிகளுடன் வால்பாறை நோக்கி வந்த அரசு பேருந்தை ஓட்டுநர் கணேஷ் (49) என்பவர் இயக்கி வந்துள்ளார். நடத்துனர் சிவராஜ் உடன் இருந்தார். அதிகாலை சுமார் 3 மணியளவில் வால்பாறை அருகே உள்ள கவர்கள் எஸ்டேட் பகுதியில் 33-வது கொண்டை ஊசி வளைவில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து குறித்து தகவல் அறிந்த வால்பாறை காவல்துறையினர் மற்றும் 108 ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த 40க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டு வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் ஓட்டுநர் கணேசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் பல பயணிகளுக்கு கை, கால் மற்றும் தலை உள்ளிட்ட பகுதிகளில் படுகாயங்கள் ஏற்பட்டதால், அவர்கள் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து வால்பாறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலை நேரத்தில் அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story

