தமிழ்நாட்டு ஏழை குழந்தைகளின் கல்வி உரிமைக்காக போராட்டம் – 40 பேர் கைது
தமிழ்நாட்டு ஏழை மாணவர்களின் கல்விக்கான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என்பதையும், அதனால் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து நேற்று மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் வலியுறுத்தல் போராட்டம் நடைபெற்றது. கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கோவைக்கு வருகை தந்ததையொட்டி, எல் அண்ட் டி பைபாஸ் அருகே உள்ள கற்பகம் கல்லூரி எதிரில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் இயக்கத்தின் தலைவர் வே.ஈசுவரன் தலைமையில் பலர் கலந்து கொண்டனர். இதில், தமிழகத்தின் ஏழை மாணவர்களுக்கு கல்வி நிதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. போராட்டம் வன்முறையாக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகக் கூறிய காவல்துறையினர், வலுக்கட்டாயமாக இடையீடு செய்து போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை கைது செய்தனர். மேலும், மாணவர்களின் உரிமைக்காகவும், கல்வி நிதியை உடனடியாக வழங்க அரசை வலியுறுத்தியும், இயக்கத்தின் சார்பில் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் தலைவர் வே.ஈசுவரன் தெரிவித்தார்.
Next Story



