தென்காசியில் கனவு இல்லம் திட்ட 402 பயனாளிகளுக்கு பணி ஆணை

தென்காசியில் கனவு இல்லம் திட்ட 402 பயனாளிகளுக்கு பணி ஆணை
X
கனவு இல்லம் திட்ட 402 பயனாளிகளுக்கு பணி ஆணை
தென்காசி இ.சி.ஈ.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமை வகித்தாா். ராணி ஸ்ரீகுமாா் எம்.பி., எம்எல்ஏக்கள் எஸ்.பழனிநாடாா், ஈ.ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.14.07 கோடி மதிப்பில் 402 பயனாளிகளுக்கும், 2001ஆம் ஆண்டிற்கு முன்பு பல்வேறு அரசுத் திட்டங்கள் மூலம் கட்டப்பட்ட வீடுகளை ரூ.1.98 கோடி மதிப்பில் புனரமைக்க 153 பயனாளிகளுக்கும் பணி ஆணைகளை வழங்கினாா். அமைச்சா் பேசியதாவது: மகளிா் விடியல் பயணம் திட்டத்தின் மூலம் இலவச பேருந்து பயணம், கலைஞா் மகளிா் உரிமைத்தொகை மூலம் மாதம்தோறும் ரூ.1000 உதவித்தொகை, தமிழ்ப் புதல்வன் திட்டம் மற்றும் புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1000 உதவித்தொகை, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட நலத்திட்டங்களை சிறப்பாக தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் குடிசைகளை மாற்றி நிரந்தர கான்கிரீட் வீடுகளாக அமைத்துத் தரும் நோக்கில் 2030ஆம் ஆண்டிற்குள் 8 லட்சம் வீடுகள் கட்ட உத்தேசிக்கப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் 2024-2025ஆம் ஆண்டு ஒரு லட்சம் வீடுகள், 2025-2026ஆம் ஆண்டு ஒரு லட்சம் வீடுகள் என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பழுதடைந்த ஓட்டு வீடுகளை பழுதுநீக்கம் செய்யும் பணிக்கு ஒரு வீட்டிற்கு அதிகபட்சமாக ரூ. 70ஆயிரம், சாய்வுதள கான்கிரீட் வீடுகள் புனரமைப்பு பணிக்கு ஒரு வீட்டிற்கு ரூ. 1.50 லட்சம் வீதம் வழங்கப்படுகிறது.
Next Story