உத்தமசோழபுரம் ஊராட்சியில் வெட்டாற்றின் குறுக்கே ரூ.40.50 கோடி மதிப்பீட்டில்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் உத்தமசோழபுரம் கிராமத்தில், வெட்டாற்றின் குறுக்கே கடல் நீர் உட்புகுவதை தடுக்க ரூ.49 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில், புதிய கடைமடை இயக்கு அணை அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டும் பூமி பூஜை நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தலைமை வகித்து அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், கீழ்வேளுர் எம்எல்ஏ நாகை மாலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் பேசியதாவது தஞ்சாவூர் மாவட்டம் தென் பெரம்பூர் கிராமத்தில் உள்ள தலைப்பிலிருந்து, வெட்டாறு பிரிகிறது. வெட்டாறு, வெண்ணாறு வடிநில உபகோட்டம் நாகை கட்டுப்பாட்டிலுள்ளது. வெட்டாற்றில், எண்கண் இயக்கு அணை அமைந்துள்ளது. இதன் மூலம், பாசனம் மற்றும் வடிகால் வசதியளித்து, இறுதியில் வங்கக்கடலில் கலக்கிறது. வெட்டாறு பாசனத்துக்கும், மழைக்காலங்களில் வடிகாலாகவும் பயன்படும் ஆறு ஆகும். 2008 -ம் ஆண்டின் மழைக்காலத்தில், நாகை மாவட்டத்தில், அதிகபட்ச வெள்ள நீர் வெளியேற்றம் 16,520 கனஅடி மற்றும் 2020 -ம் ஆண்டின் அதிகபட்ச வெள்ள நீர் வெளியேற்றம் 9500 கனஅடி ஆகும். இக்காலங்களில் அதிகப்படியான வெள்ளநீரின் காரணமாக, கரைகள் சேதமடைந்ததோடு, கரை உடைப்புகளும் ஏற்பட்டன. வெட்டாற்றின் கடைமடை இயக்கு அணையான ஓடாச்சேரி இயக்கு அணை, வங்கக்கடலில் இருந்து 19 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இதன் மூலம் ஆண்டு தோறும் மழைக்காலங்களில் சுமார் 14 ஆயிரம் கன அடி வெள்ளநீர் வெளியேற்றப்பட்டு, கடலில் சென்று கலக்கின்றது. வெட்டாறு கடலில் கலக்குமிடத்திலிருந்து, 19 கிலோ மீட்டர் தொலைவிற்கு கடல் நீர் உட்புகுந்துள்ளதால் இப்பகுதி கிராமங்களான கடம்பங்குடி, விளாம்பாக்கம், ஆணைகுப்பம், ஒக்கூர், உத்தமசோழபுரம், பூதங்குடி, வடகரை, கோகூர், நாகூர், பெருங்கடம்பனூர் ஆகிய கிராமங்களில், மண்வளம் உப்புத் தன்மையோடும் மற்றும் நிலத்தடி நீர் உப்புதன்மையோடும் உள்ளது. இதனால், மேற்கூறிய கிராமங்களில் விளைநிலங்கள் உப்பளங்களாக மாறுவதுடன், குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட வாய்ப்புள்ளது. வருகிற காலங்களில், கடல் நீர் உட்புகுவதை தடுக்கும் வகையிலும், பாசன உபரிநீர் மற்றும் மழை வெள்ளநீர் ஆகியவற்றை வீணாக கடலில் கலக்காமல் சேமிக்கும் வகையிலும், உத்தமசோழபுரம் கிராமத்தில் வெட்டாற்றின் குறுக்கே புதிய கடைமடை இயக்கு அணை அமைக்கப்படுவதன் மூலம் 11 கி.மீ தொலைவிற்கு, உபரி நீர் சுமார் 87.65 மில்லியன் கன அடி அளவிற்கு சேமிக்கப்படும்.இத்திட்டத்தினால், இதன் அருகாமையில் உள்ள கிராமங்களின் விளைநிலங்கள் பாதுகாக்கப்படுவதுடன், சுமார் 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் மண் வளமும், நிலத்தடி நீரின் உப்புத் தன்மையும் காலப்போக்கில் குறைந்து, நிலத்தடி நீர்வளமும் பாதுகாக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், வெண்ணாறு வடிநில கோட்டம் திருவாரூர் செயற்பொறியாளர் நீர்வளத்துறை ராஜேந்திரன், நாகை நீர்வளத்துறை செயற்பொறியாளர் கமலக்கண்ணன், நீர்வளத்துறை உதவிப்பொறியாளர்கள் சீனிவாசன், கோவிந்தராஜன், திருமருகல் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.டி.எஸ்.சரவணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜனனி பாலாஜி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story




