முதிர்வு தொகை தராமல் ஏமாற்றிய நிதி நிறுவனம்: மருத்துவருக்கு ரூ. 4.09 கோடி வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு

X
முதிர்வு தொகை தராமல் ஏமாற்றியதால், பாதிக்கப்பட்ட மருத்துவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ரூ. 4.09 கோடி வழங்குமாறு தனியார் நிதி நிறுவனத்தினருக்கு தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணையம் புதன்கிழமை உத்தரவு பிறப்பித்தது. தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் த.சண்முகநாதன். இவர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் இதய மருத்துவராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் தனது ஓய்வு பெற்ற பணப்பலன்கள், தனது உழைப்பால் பெருக்கிய தொகைகள், ஈட்டிய அசையா சொத்துகளை விற்ற வகையில் கிடைத்த தொகைகள் ஆகியவற்றை வங்கியில் வைப்பீடாக வைத்திருந்தார். இந்நிலையில், சண்முகநாதனை பட்டுக்கோட்டையிலுள்ள தனியார் நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் அணுகி ஓராண்டு நிரந்தர வைப்பீடுகளுக்கு 10.5 சதவீதம் வட்டி தருவதாகவும், தங்களது பெயரிலும், மனைவி, 2 மகள்கள், மருமகன்கள் பெயரிலும் வைப்பீடு செய்யுமாறும் ஆசை வார்த்தைகளைக் கூறினர். இதை நம்பிய சண்முகநாதன் தனது பெயரிலும், 2 மகள்கள், 2 மருமகன்கள் பெயர்களிலும் 2018, அக்டோபர் 31 ஆம் தேதி முதல் 2019, ஜூலை 11 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் வைப்பீடு செய்து ரசீதுகளும் பெற்றார். இதன் முதிர்வு தொகைகளையும், பின்னிட்ட வட்டியுடன் தருமாறு சண்முகநாதன் 2020, அக்டோபர் 5 ஆம் தேதி கோரினார். ஆனால், தொகைகளைத் தனியார் நிதி நிறுவனம் தராததால், தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணையத்தில் சண்முகநாதன் உள்ளிட்டோர் ரூ. 2.96 கோடி முதிர்வு தொகைகளையும், மன உளைச்சல் உள்ளிட்டவற்றுக்கான இழப்பீடுகளையும் வழங்குமாறு கோரி வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கை மன்றத் தலைவர் த.சேகர், உறுப்பினர் கே.வேலுமணி விசாரித்து, சண்முகநாதன் உள்ளிட்டோருக்கு முதிர்வு தொகைகள் ரூ. 2.96 கோடியும், மன உளைச்சல், வீண் விரையத்துக்காக ரூ. 1.10 கோடியும், வழக்கு செலவுத் தொகையாக ரூ. 3.50 லட்சமும் என மொத்தம் ரூ. 4.09 கோடியை மற்றும் வைப்பீட்டுத் தொகைக்கான வட்டியையும் சேர்த்து 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என தனியார் நிதி நிறுவனத்தினருக்கு உத்தரவிட்டு புதன்கிழமை தீர்ப்பளித்தனர்.
Next Story

