முதல்வர் மருந்தகத்தில் முதல் விற்பனையை தொடங்கி வைத்த அமைச்சர் மா.மதிவேந்தன்.

முதல்வர் மருந்தகத்தில் முதல் விற்பனையை தொடங்கி வைத்த அமைச்சர் மா.மதிவேந்தன்.
X

Minister mathivendhan

தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக தமிழ்நாடு முழுவதும் 1000 'முதல்வர் மருந்தகங்களை' திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேத்தன் முதல்வர் மருந்தகத்தில் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கில் கூட்டுறவுத் துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் 1000 'முதல்வர் மருந்தகங்களை' காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், மங்களபுரம், திம்மநாயக்கன்பட்டி, அத்தனூர் - ஆயிபாளையம் மற்றும் பிள்ளாநல்லூர் ஆகிய முதல்வர் மருந்தகங்களில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, தலைமையில் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலன் காக்கும் வகையில் மக்கள் நல்வாழ்விற்காக உன்னத திட்டமாக குறைந்த விலையில் (ஜெனரிக்) மருந்து, மாத்திரைகளையும் பிற மருந்துகளையும் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் 1,000 ”முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும்" என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து இன்றைய தினம் சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கில் கூட்டுறவுத் துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் 1000 'முதல்வர் மருந்தகங்களை' காணொலி வாயிலாக திறந்து வைத்துள்ளார்கள். நாமக்கல் மாவட்டத்தில் 17 கூட்டுறவு சங்கங்களின் மருந்தகங்கள், 10 தனிநபர் மருந்தகங்கள் என மொத்தம் 27 முதல்வர் மருந்தகங்களை திறந்து வைத்துள்ளார்கள். இம்மருந்தகங்கள் வாயிலாக தரமான மருந்துகள் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது. ஏழை, எளிய மக்கள், முதியோர்கள், சர்க்கரை நோயாளிகள், இரத்த அழுத்த நோயாளிகள் தங்களுக்கு தேவையான மருந்துகளை வாங்க சுமார் ரூ.500 முதல் 1000 செலவிடுகின்றார்கள். பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாத்திட 'முதல்வர் மருந்தகங்கள்' மூலம் சுமார் 75 சதவிகிதம் வரை தள்ளுபடி விலையில் சேவை மனப்பான்மையோடு மருந்துகள் விற்பனை செய்யப்படும். பொதுமக்கள் முதல்வர் மருந்தகங்களை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். மருந்தகத்தின் சேவை மற்றும் மருந்துபொருட்களின் தரம் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திடும் வகையிலும், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்திடும் வகையிலும், உரிய காலத்தில் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றார்கள். குறிப்பாக கொரோனா காலத்தில் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தி நோய்த்தொற்றிலிருந்து மக்களை பாதுகாத்துள்ளார்கள். மேலும், மக்களை தேடி மருத்துவம், மகளிருக்கு பேருந்துகளில் இலவச விடியல் பயணம், மகளிர் உரிமை தொகை மாதம் ரூ.1,000/-வழங்கும் திட்டம், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் தள்ளுபடி, மகளிர் சுய தொழில் தொடங்கிட கடனுதவி, பெண்கள் உயர்கல்வி பயில்வதை ஊக்குவித்திட மாதம் ரூ.1,000/- வழங்கும் புதுமைப் பெண் திட்டம், மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000/- வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம், ஏழை, எளிய குழந்தைகளின் பசியினை போக்கிட பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்கள். விடியல் பயணத்திட்டத்தின் மூலம் மகளிர் மாதந்தோறும் சுமார் ரூ.800.87 சேமிக்கின்றார்கள். மேலும், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், நாரைகிணறு பகுதி வாழ் மக்களின் 100 ஆண்டு கால கனவை நிறைவேற்றி 814 நபர்களுக்கு ரூ.32.84 கோடிமதிப்பீட்டில் 723 பட்டா வழங்கி உள்ளார்கள். மங்களபுரத்தில் அப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்திட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்கள். இராசிபுரம் பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்திடும் வகையில் ரூ.854 கோடி மதிப்பீட்டில் இராசிபுரம் நகராட்சி, 8 பேரூராட்சிகள், 4 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 523 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றது. இதன் மூலம் இப்பகுதி மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும். இதன் மூலம் இத்தொகுதி குடிநீர் தட்டுப்பாடு இன்றி சுகாதாரமான, பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும் தொகுதியாக அமையப்பெறும். நாங்கள் அனைவரும் எப்பொழுதும் அர்பணிப்போடு உங்களுக்காக உழைப்போம் என மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தெரிவித்தார். இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில் முனைவோர்கள் / மருந்தாளுநர்களுக்கு ரூ.3 இலட்சம் அரசு மானியம் வழங்கப்படுகிறது. கூட்டுறவு அமைப்புகள் மூலம் முதல்வர் மருந்தகங்கள் செயல்படுத்தப்படும் நேர்வில் அரசு மானியத் தொகையானது ரூ.2 இலட்சம் வழங்கப்படுகிறுது. அதில் 50% உட்கட்டமைப்பு வசதிக்கும், 50% மருந்துகளாகவும் வழங்கப்படுகிறது. நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம், நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட உள்ள முதல்வர் மருந்தகத்திற்கான மருந்துகள் சேமிக்கும் கிடங்காக செயல்படுகிறது. இக்கிடங்கிலிருந்து மருந்தகத்திற்கான மருந்துகள் வழங்கப்படும். மாவட்ட கிடங்கிலிருந்து முதல்வர் மருந்தகங்களுக்கு மருந்துகளை அனுப்ப தனியாக ஒரு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருந்தக கிடங்கிற்கு ஜெனரிக் மருந்துகள் (Generic Medicines) தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் (TNMSC) மூலமும் (Branded Medicines, Surgical Items) முதலியவை தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம் (TNCCF) மூலமும் கொள்முதல் செய்யப்பட்டு முதல்வர் மருந்தகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் முதல்வர் மருந்தக உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 17 கூட்டுறவு சங்கங்களுக்கு தலா ரூ.1.00 இலட்சம் வீதம் ரூ.17.00 இலட்சமும், 10 தொழில்முனைவோர்களுக்கு தலா ரூ.1.50 இலட்சம் வீதம் ரூ.15.00 இலட்சமும் என மொத்தம் ரூ.32.00 இலட்சம் மானிய தொகை வழங்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 27 முதல்வர் மருந்தகங்களிலும் உட்கட்டமைப்பு வசதிகளான அங்கீகரிக்கப்பட்ட பெயர்பலகை, ஏ.சி (AC), குளிர்சாதனப்பெட்டி (Fridge), அடுக்ககம் (Rack), அச்சுப்பொறியுடன் கூடிய கணினி (Computer with Printer) உள்ளிட்ட வசதிகள் அனைத்து மருந்தகங்களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.அதனைத்தொடர்ந்து, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் மங்களபுரத்தில் முதல்வர் மருந்தகத்தில் முதல் விற்பனையை தொடங்கி வைத்து, 5 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.30.00 இலட்சம் மதிப்பில் கடனுதவி, 24 விவசாயிகளுக்கு ரூ.29.23 இலட்சம் மதிப்பில் பயிர்க்கடன் என 29 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.59.23 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், ஆயில்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க மரச்செக்கு கடலை எண்ணெய் உற்பத்தி ஆலையை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.இராமசுவாமி, இணைபதிவாளர், கூட்டுறவு சங்கங்கள் க.பா.அருளரசு உட்பட துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story