அரியலூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் 432 பேர் கைது
Ariyalur King 24x7 |30 Dec 2024 3:39 PM GMT
அரியலூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் 432 பேர் கைது செய்யப்பட்டனர்
அரியலூர், டிச.30: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து அரியலூரில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் 432 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர். அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க தவறிய திமுக அரசைக் கண்டித்து தமிழக முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். அதன்படி அரியலூரில் ஆர்ப்பாட்டம் நடத்த காவல் துறையினர் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அண்ணாசிலை அருகே அக்கட்சியின் மாவட்ட செயலரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமையில் அதிமுகவினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 432 பேரை கைது செய்து மாலையில் விடுவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மாவட்ட அவைத் தலைவரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான ராமஜெயலிங்கம், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் இளவரசன், முன்னாள் மாவட்டச் செயலர் இளவழகன், மாவட்ட பொருளாளர் அன்பழகன், நகரச் செயலர் ஏ.பி.செந்தில், மாவட்ட பொருளாளர் அன்பழகன், மாவட்ட அம்மா பேரவைச் செயலர் ஒ.பி.சங்கர், இணைச் செயலர் நா.பிரேம்குமார், ஒன்றியச் செயலாளர்கள், கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். .:
Next Story