ராமநாதபுரம் குறத்திக்கு நாள் கூட்டம் 434 மனுக்கள் பெறப்பட்டன

அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது இதில் 434 மனுக்கள் பெறப்பட்டன
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் குறித்த 434 மனுக்கள் பெற்று மனுதாரரின் முன்னிலையில் மனுக்களை விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பாக பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், ஒவ்வொரு வாரமும் பொதுமக்களிடம் பெறக்கூடிய மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒருமாத காலத்திற்குள் மனுதாரர்களுக்கு உரிய தீர்வு வழங்கிட வேண்டும் எனவும், தீர்வு வழங்க முடியாத மனுக்கள் நிலை குறித்து மனுதாரர்களிடம் அலுவலர்கள் எடுத்துரைக்க வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறைசார்ந்த அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்படுவதுடன் மனுதாரர் தங்கள் கோரிக்கை தொடர்பாக ஒரு முறைக்கு மேல் கோரிக்கை மனு வராமல் இருக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக வரித்துறையின் மூலம் இராமநாதபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் விளைபொருட்களை இருப்பு வைத்த 5 விவசாயிகளுக்கு ரூ.9,89,000/- மதிப்பீட்டில் பொருளீட்டு கடன் தொகைக்கான காசோலையினை வழங்கியதுடன் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 2 பயனாளிகளுக்கு தலா ஒரு இலட்சம் வீதம் ரூ.2,00,000/- ற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அவர்கள் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு , சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் தனலெட்சுமி , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) பாஸ்கரமணியன் , வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை செயலர் மல்லிகா கண்காணிப்பு அலுவலர் சரவணக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story