கடை உரிமையாளருக்கு மாநகராட்சி நிர்வாகம் ரூ. 4.46 லட்சம் வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு

கடை உரிமையாளருக்கு மாநகராட்சி நிர்வாகம் ரூ. 4.46 லட்சம் வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு
X
தீர்ப்பு
குத்தகை தொகையைத் திருப்பித் தருவதில் அலட்சியம் காட்டியதாக கடை உரிமையாளருக்கு மாநகராட்சி நிர்வாகம் ரூ. 4.46 லட்சம் வழங்குமாறு தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணையம் உத்தரவிட்டது. தஞ்சாவூர் மகர்நோன்புச்சாவடியைச் சேர்ந்த கோவிந்தராமய்யர் மகன் சந்திரநாத். திருவள்ளுவர் திரையரங்கத்தில் கோவிந்தராமய்யர் நடத்தி வந்த எழுதுபொருட்கள் விற்பனையகத்தை சந்திரநாத் உரிமையைத் தனது பெயருக்கு மாற்றி நடத்தினார். இந்நிலையில், பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் புதிய கட்டடம் கட்டுவதற்காக திருவள்ளுவர் வணிக வளாகம் இடிக்கப்பட்டது. இதனால், சந்திரநாத் 2021, டிசம்பர் 21 ஆம் தேதி கடையை காலி செய்தார். இதையடுத்து, கடையை குத்தகைக்கு பெற்றபோது கோவிந்தராமய்யர் செலுத்திய வைப்புத்தொகை ரூ.3லட்சத்து 14 ஆயிரம், தான் செலுத்திய ரூ.31 ஆயிரத்து 488 ஆகியவற்றை திரும்பத் தரும்படி, சந்திரநாத் பல முறை நேரில் சென்று முறையிட்டும், 2 முறை மனு அளித்தும் மாநகராட்சி நிர்வாகம் தரவில்லை. இதனால், தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணையத்தில் சந்திரநாத் 2023, டிசம்பர் 18 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை ஆணைய தலைவர் த.சேகர், உறுப்பினர் கே.வேலுமணி விசாரித்து, சந்திரநாத்துக்கு ரூ.3 லட்சத்து 45 ஆயிரத்து 488ம், மன உளைச்சல், பொருளாதார இழப்புக்கு ஒட்டுமொத்த இழப்பீடாக ரூ.1 லடசமும், வழக்கு செலவுத்தொகையாக ரூ. 10 ஆயிரமும் வழங்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்துக்கு  உத்தரவிட்டனர்.
Next Story