இலவச வீட்டு மனை வழங்க வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தியதில் 45 நபர்களுக்கு பட்டா வழங்குவதாக கூறிய அதிகாரிகள் .

X
Komarapalayam King 24x7 |20 Aug 2025 1:43 PM ISTகுமாரபாளையம் தாலுக்கா அலுவலகம் முன்பு இலவச வீட்டு மனை வழங்க வலியுறுத்தி 91 குடும்பத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் நடத்தியதில் 45 நபர்களுக்கு பட்டா வழங்குவதாக அ
குமாரபாளையம் தாலுக்கா அலுவலகம் முன்பு இலவச வீட்டு மனை வழங்க வலியுறுத்தி 91 குடும்பத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் நடத்தியதில் 45 நபர்களுக்கு பட்டா வழங்குவதாக அதிகாரிகள் கூறினர். குமாரபாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட பல்லக்காபாளையம், ஆயிகவுண்டம்பாளையம், மலைப்பாளையம், நல்லாம்பாளையம் மற்றும் வஞ்சிபாளையம், குளத்துக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாழும் 149 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பல்லக்காபாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொழுது வருவாய்த்துறையினர் அரசுக்கு சொந்தமான நிலங்களை ஆய்வு செய்து படிப்படியாக பொதுமக்களுக்கு பட்டா வழங்குவதாக உறுதி அளித்தததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இதனை அடுத்து அரசுக்கு சொந்தமான தரிசு புறம்போக்கு நிலங்கள் ஆய்வு செய்யப்பட்டு நிலங்களும் அளவீடுகள் நடைபெற்றன. ஆனால், படிப்படியாக வழங்குவதாக கூறிய வீட்டுமனை பட்டாக்கள் இதுவரை வழங்கவில்லை. இந்நிலையில் வாடகை வீட்டில் தவித்து வரும் இப்பகுதி பொது மக்களுக்கு உடனடியாக இலவச வீட்டு மனை வழங்கிட வலியுறுத்தி குமாரபாளையம் தாலுக்கா அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் மற்றும் கிராமப்புற தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் துரைசாமி தலைமையில் 91 குடும்பத்தினர், குமாரபாளையம் தாலுக்கா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து வந்த குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி, தாசில்தார் சிவகுமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மாலை 05:00 மணியளவில் உடன்பாடு ஏற்பட்டது. இது குறித்து சங்க மாவட்ட தலைவர் துரைசாமி கூறியதாவது: எங்களது போராட்டம் காலை பத்து மணி முதல் நடந்த நிலையில், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று இடங்களை ஆய்வு செய்து, 45 நபர்களுக்கு இடம் தேர்வு செய்யப்பட்டது. செப். 9ல், பல்லக்காபாளையம் பகுதியில் நடக்கவுள்ள அரசு விழாவில் 45 நபர்களுக்கு முதற்கட்டமாக இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என்று உறுதி கூறியுள்ளனர். அதனால் நாங்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிடுகிறோம். இவ்வாறு அவர் கூறினார். இதில் நிர்வாகிகள் கோவிந்தசாமி, சண்முகம், ரேவதி, சின்னத்தாயி உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story
