பட்டுக்கோட்டை பகுதியில் அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த 450 கிலோ வெடி பொருட்கள் பறிமுதல் : ஒருவர் கைது

X
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியில் அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த 450 கிலோ நாட்டு வெடிமருந்து உள்ளிட்ட பொருட்களை வருவாய்த்துறையினர் கைப்பற்றினர். இது தொடர்பாக மதுக்கூர் காவல்துறையினர் ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் பகுதியில் கடந்த வாரம் அனுமதியின்றி செயல்பட்ட பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் உயிரிழந்தனர். இதையடுத்து மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகள் மற்றும் பட்டாசு விற்பனையாளர்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டார். இதையடுத்து பட்டுக்கோட்டை வட்டத்தில் இது தொடர்பாக வேறு இடங்களில் ஏதும் வெடிபொருட்கள் முறையாக உரிமம் பெறாமல் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தொடர்ந்து கண்காணிப்பட்டு வருகிறது. இந்த ஆய்வின் போது பட்டுக்கோட்டை வட்டாட்சியர் தர்மேந்திரா, துணை வட்டாட்சியர் ஷேக் உமர்ஷா, மதுக்கூர் காவல் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், மதுக்கூர் சரக வருவாய் ஆய்வாளர் கவுதமன், கீழக்குறிச்சி கிழக்கு கிராம நிர்வாக அலுவலர் ஆறுமுகம், கீழக்குறிச்சி மேற்கு கிராம நிர்வாக அலுவலர் வீரசோழன், கிராம உதவியாளர்கள் பத்மா, ரவிச்சந்திரன் ஆகியோர் கீழக்குறிச்சி பகுதியில் ப.அம்பிகாபதி (45) என்பவரது வீட்டில் ஆய்வு செய்தனர். அப்போது, அவர் வீட்டின் மாடி பகுதியில் 450 கிலோ எடையில், நாட்டு வெடிகள், வெடி பொருட்கள் ஆகியவை அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்ததை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மதுக்கூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அம்பிகாபதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

