கனிம கொள்ளைக்கான அபராதம் ரூ.4.51 கோடியை ஆட்சியர் வசூலிக்க உத்தரவு

கனிம கொள்ளைக்கான அபராதம் ரூ.4.51 கோடியை ஆட்சியர் வசூலிக்க உத்தரவு
X
சிவகங்கை மாவட்டத்தில் கனிம வளக் கொள்ளைக்காக விதிக்கப் பட்ட ரூ.4.51 கோடியை வசூலிக் கக்கோரிய வழக்கில் மாவட்டஆட் சியர் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், சாலைக்கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: சிவகங்கை மாவட்டத்தில் 2018 - 2019, 2019 - 2020 ஆண்டுகளில் சட்டவிரோத கனிமங்கள் வெட்டி எடுத்ததாக பலருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதத் தொகை முழுமையாக வசூலிக்கப்படாமல் உள்ளது. இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கேட்டதற்கு அபராதத் தொகையில் ரூ.4.51 கோடி இன்னும் வசூலிக்கப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் கனிம வளங்கள் மற்றும் அது தொடர்புடைய இனங்கள் வாயிலாக அரசுக்கு வர வேண்டிய வருமானங்கள் மற்றும் அபராதத் தொகையில் ஆண்டுக்கணக்கில் வசூலிக்கப்படாமல் உள்ளது. இது ஏன் என்பது தெரியவில்லை. கனிம வளங்கள் மற்றும் அது தொடர்புடைய இனங்கள் வழியாக அரசுக்கு வர வேண்டிய வருமானங்கள் முறையாக வசூலிக்கப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்படுகிறதா?அப்பணம் உரிய முறையில் செலவிடப்படுகிறதா? என்பதை அரசு செயலாளர் அல்லது உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளேன். அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, என் மனுவை பரிசீலித்து கனிம வளங்கள் மற்றும் அது தொடர்புடைய இனங்கள் வழியாக சிவகங்கை மாவட்டத்தில் வசூலிக்கப்படாமல் இருக்கும் அபராதத் தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கவும், தமிழகத்தில் இதர மாவட்டங்களில் அபராதத் தொகைகள் முறையாக வசூலிக்கப்பட்டு அரசு கணக்கில் வரவு வைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய அரசு அதிகாரி அல்லது தனி அதிகாரியை நியமிக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியகிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள். மனுதாரர் கோரிக்கை தொடர்பாக 6.12.2024-ல் அளித்த மனுவை சிவகங்கை மாவட்ட ஆட்சியர், கனிமவள உதவி இயக்குநர் மற்றும் சிவகங்கை வட்டாட்சியர் ஆகியோர் 3 மாதத்தில் தகுதி அடிப்படையில் பரிசீலித்து சட்டப்படி உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
Next Story