தஞ்சாவூர் அருகே ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள் 46 பேருக்கு சிறிய காயம்

X
தஞ்சாவூர் அருகே, ராமநாதபுரம் ஊராட்சியில் புதன்கிழமை காலை ஜல்லிக்கட்டு விழா நடந்தது. இதனை தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் செ.இலக்கியா துவக்கி வைத்தார். தஞ்சாவூர் அருகே ராமநாதபுரம் ஊராட்சி திரௌபதை அம்மன் கோவில் திடலில் ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது. இதை, கோட்டாட்சியர் செ. இலக்கியா உறுதிமொழி வாசித்து தொடங்கி வைத்தார். உறுதிமொழியை மாடு பிடி வீரர்களும் ஏற்றுக் கொண்டனர். ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக தஞ்சாவூர், வல்லம், புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி என பல மாவட்டங்களிலிருந்து 697 காளைகள் பதிவு செய்யப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளை தஞ்சை கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர்கள் பரிசோதனைக்குப் பிறகு அனுமதித்தனர். வாடிவாசலில் இருந்து 100 மீட்டர் தூரம் வரை ஒரு அடி உயரத்திற்கு தென்னை நார்கள் பரப்பப்பட்டன. காளைகளும், வீரர்களும் கீழே விழுந்தாலும் காயம் ஏற்படாமல் இருக்கும் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. காளைகள் பார்வையாளர் பகுதிக்குள் சென்று விடாமல் இருப்பதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டன. மாடு பிடி வீரர்களை களத்துக்குள் அனுப்புவதற்கு தனி பாதை ஏற்படுத்தப்பட்டது. வீரர்கள் காயம் அடைந்தால் உடன் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தப்பட்டது. ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்கான விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. இதன்படி ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாட்டின் உரிமையாளர் மற்றும் மாடுபிடி வீரர்கள் இணையத்தில் தங்களை பற்றி பதிவு செய்து கொண்டனர். ஆன்லைன் டோக்கன் முறைப்படி வரிசையாக மட்டுமே காளைகள் உள்ளே அனுமதிக்கப்பட்டன. தொடர்ந்து காளைகள் ஒவ்வொன்றாகப் பட்டியிலிருந்து அவிழ்த்து விடப்பட்டது. காளைகளைப் பிடிப்பதற்காக 266 வீரர்கள் பதிவு செய்திருந்து களமிறங்கினர். காளைகளை பிடிக்க இளம் காளையர்கள் போட்டி போட்டனர். சில காளைகள் சுற்றிச் சுழன்று தங்களை பிடிக்க வந்த வீரர்களை மிரள வைத்தன. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராம் உத்தரவின் பேரில், வல்லம் துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ் குமார் தலைமையில், 300 க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாடுகளை பிடித்த வீரர்களுக்கு சைக்கிள், எவர்சில்வர் பொருட்கள், கட்டில், பீரோ போன்ற பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் வெற்றிப் பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இதில், 24 மாடுபிடி வீரர்கள், 19 காளையின் உரிமையாளர்கள் மற்றும் 3 பார்வையாளர்கள் என மொத்தம் 46 நபர்களுக்கு சிறிதளவிலான காயம் ஏற்பட்டது, 4 நபர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஏற்பாடுகளை திரௌபதையம்மன் ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் கிராம நாட்டாண்மைக்காரர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.
Next Story

