மதுக்கடையை மூடக் கோரி ஆட்சியரகத்தில் காத்திருப்பு போராட்டம்: 47 பேர் கைது

போராட்டம்
தஞ்சாவூர் அருகே அருமலைக் கோட்டையிலுள்ள மதுக்கடையை மூடக் கோரி ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 47 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை அருகேயுள்ள அருமலைக்கோட்டை கிராமத்தில் டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளது. இக்கடை அருகே ஜனவரி மாதம் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி உடைக்கப்பட்ட மது பாட்டிலால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.  அப்போது, நடைபெற்ற போராட்டத்தில் இந்தக் கொலை சம்பவத்துக்கு அருமலைக்கோட்டை பகுதியிலுள்ள மதுக்கடையும் ஒரு காரணம் என்றும், எனவே, இந்த மதுக்கடையை அகற்ற வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதுவரை மதுக்கடை அகற்றப்படாததால் அதிருப்தியடைந்த கிராம மக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் அரு.சீர்.தங்கராசு தலைமையில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த வல்லம் காவல் துணைக் கண்காணிப்பாளர் கணேசமூர்த்தி, டாஸ்மாக் உதவி மேலாளர் ப. அருணகிரி, தஞ்சாவூர் வட்டாட்சியர் ப.அருள்ராஜ் உள்ளிட்டோர் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  அப்போது 15 நாட்களுக்குள் கடை மூடப்படும் என அலுவலர்கள் உறுதியளித்தனர். ஆனால், உடனடியாக மதுக்கடையை மூட வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 47 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
Next Story