கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் இதுவரை பயனாளிகளுக்கு ரூ.47.44 கோடி ஒதுக்கீடு : ஆட்சியர் தகவல் 

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் இதுவரை பயனாளிகளுக்கு ரூ.47.44 கோடி ஒதுக்கீடு : ஆட்சியர் தகவல் 
X
கலைஞரின் கனவு இல்லம்
தஞ்சாவூர் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில், பல்வேறு பகுதிகளில் பயனாளிகளுக்கு வீடுகள் கட்டப்பட்டு வருவதை, மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் செய்தியாளர் பயணத்தின் போது பார்வையிட்டு ஆய்வு செய்தார். பூதலூர் ஒன்றியம், புதுப்பட்டி ஊராட்சியில், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில், ஊரக வீடுகள் சீரமைத்தல் திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டுள்ள வீட்டினை, மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,  "கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ், குடிசை வீடுகள் அனைத்தையும் கான்கீரிட் வீடாக மாற்றிட 2024-25 ஆம் ஆண்டிற்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 3,000 வீடுகள் (வீடு ஒன்று ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம்) மதிப்பீட்டில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, தற்போது வரை 1,275 வீடுகள் முடிக்கப்பட்டுள்ளது.  இதுவரை பயனாளிகளுக்கு ரூ.47 கோடியே 44 லட்சத்து 80 ஆயிரத்து 56 - மட்டும் கட்டுமானத்திற்காக செலவிடப்பட்டுள்ளது. மேலும், வீடு கட்டும் பயனாளிகளின் குடும்பத்தினருக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் 2,082 குடும்பங்களுக்கு 2 லட்சத்து 53 ஆயிரத்து 416 மனித சக்தி நாட்களுக்கு ரூ.8 கோடியே 7 லட்சத்து 8 ஆயிரத்து 747- உடல் உழைப்புடன் கூடிய பணி வழங்கப்பட்டுள்ளது.  கூடுதலாக தூய்மை பாரத திட்டத்தின்கீழ் கழிவறை அல்லாத வீடுகளுக்கு வீடு ஒன்று ரூ.12 ஆயிரம் மதிப்பீட்டில் 1,319 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில், 2001 ஆம் ஆண்டு வரை பல்வேறு அரசு திட்டங்களின்கீழ் கட்டப்பட்ட வீடுகளை சீரமைக்க ஊரக வீடுகள் பழுது பார்க்கும் திட்டத்தின்கீழ் 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் 2024-25 ஆம் ஆண்டு அரசு திட்டத்தின்கீழ் ஓட்டு வீடுகள் மற்றும் சாய்வு தள கான்கீரிட் வீடுகள், சிறு பழுது மற்றும் பெரும் பழுதுகளை பழுது நீக்கம் செய்வதற்கு 3,564 வீடுகள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு தற்போது வரை 3,425 வீடுகள் பழுது நீக்கம் செய்யும் பணி முடிக்கப்பட்டுள்ளது.  இதுவரை பயனாளிகளுக்கு ரூ.27 கோடியே 88 லட்சத்து 99 ஆயிரத்து 36 மட்டும் பழுது நீக்கப் பணிகளுக்காக செலவிடப்பட்டுள்ளது" என மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார். பயனாளிகள் நன்றி  பூதலூர் ஒன்றியம், புதுப்பட்டி ஊராட்சியில் வசித்து வரும் மாரியாயி மற்றும் கார்த்திகா ஆகிய பயனாளிகள் கூறுகையில்," நாங்கள் 100 நாள் கூலி வேலை செய்து, எங்களது பழுதடைந்த வீட்டை சரிசெய்ய முடியாமல் மழையில் சிரமப்பட்ட நிலையில், எங்களுக்கு வீட்டை பழுது பார்க்க உதவி செய்த முதலமைச்சர் அய்யா அவர்களுக்கு ரொம்ப நன்றிங்க" என்று தெரிவித்தனர். இந்த செய்தியாளர் சுற்றுப் பயணத்தின் போது, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர் மு.பாலகணேஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story