சேலம் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு தருவதாக கூறி ரூ.48 லட்சம் மோசடி
கோப்பு படம்
சேலத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு தருவதாக கூறி ரூ.48¾ லட்சம் மோசடி செய்த அடகு கடைக்காரர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் குமாரசாமிப்பட்டி சீரங்கபாளையம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 60). இவர் சீட் கவர் செய்யும் தொழில் செய்து வருகிறார்.
இவர் சேலம் மாநகர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:- அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் கடந்த 2018-ம் ஆண்டு எனது வீடு அருகே அடகு நகை கடை வைத்திருந்தார்.
அப்போது அவருக்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் அவர் அழகாபுரம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட இருப்பதாகவும், இதற்காக ரூ.50 லட்சம் என்னிடம் கேட்டார். ஆனால் வயது முதிர்வை காட்டி இதற்கு மறுத்து விட்டேன். பின்னர் அவர் என்னிடம் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீடு தருவதாக ஆசைவார்த்தை கூறினார். இதை நம்பி ரூ.48 லட்சத்து 70 ஆயிரம் அவருக்கு கொடுத்தேன்.
இந்த பணத்துக்கு ஈடு செய்வதற்காக ராஜேந்திரன் என்னிடம் நிலப்பத்திரம் ஒன்று கொடுத்தார். பின்னர் கட்டுமான பணிக்கு பணம் தேவைப்படுவதாக கூறி நில பத்திரத்தை திரும்ப வாங்கி கொண்டார். அதைத்தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்பு கட்டியும் அதில் எனக்கு வீடு ஒதுக்கவில்லை. மேலும் வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்காமல் ஏமாற்றியதுடன் எனக்கு மிரட்டலும் விடுக்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சீலகுமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து நாகராஜிடம் வீடு தருவதாக கூறி ரூ.48 லட்சத்து 70 ஆயிரம் மோசடி செய்த ராஜேந்திரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.