ஏற்காட்டில் 48-வது கோடை விழா நேற்று தொடங்கியது.
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு ஆண்டு முழுவதும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அப்படி ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஒவ்வொரு ஆண்டும் மே மாத இறுதியில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு 48-வது கோடை விழா- மலர்கண்காட்சி நேற்று மாலை ஏற்காடு அண்ணா பூங்காவில் கோலாகலமாக தொடங்கியது. விழாவில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வனம் மற்றும் கதர்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு மலர் கண்காட்சியை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர். பின்னர் அவர்கள் அண்ணா பூங்காவில் 73 ஆயிரம் வண்ண ரோஜா மலர்களால் உருவாக்கப்பட்ட மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகு வழியாக தண்ணீர் வெளியேறும் காட்சி, வனச்சூழல் போன்று வன உயிரினங்களான யானை, காட்டு எருமை, முயல், குரங்கு, பாம்பு, மான், புலி, சிந்து சமவெளி முத்திரையில் உள்ள பழம்பெரும் உயிரினமான ஒற்றை கொம்பு குதிரை, குழந்தைகளை கவரும் வகையில் கார்ட்டூன் கதாபாத்திரங்களான பிக்காச்சு, சார்மண்டர், தர்பூசணி உள்ளிட்ட பல்வேறு வடிவமைப்புகளை பார்வையிட்டு ரசித்தனர். மேலும், அதன் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து தோட்டக்கலைத்துறை சார்பில் மலைப்பயிர் காய்கறிகள் மற்றும் பழங்கள் கண்காட்சியையும், மகளிர் சுயஉதவிக்குழு சார்பில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் கண்காட்சியையும் அமைச்சர்கள் பார்வையிட்டனர்.
Next Story



