ஜெயங்கொண்டம் வாரச் சந்தையில் சோதனை: 49 எடையளவு இயந்திரங்கள் பறிமுதல்

ஜெயங்கொண்டம் வாரச் சந்தையில் சோதனை: 49 எடையளவு இயந்திரங்கள் பறிமுதல்
X
ஜெயங்கொண்டம் வாரச் சந்தையில் சோதனை: 49 எடையளவு இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அரியலூர், டிச.16 - அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வாரச் சந்தையில், தொழிலாளர் நலத் துறையினர், பெரம்பலூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கா.மூர்த்தி தலைமையில், மேற்கொண்ட சோதனையில் 23 எலக்ட்ரானிக் எடைத்தராசுகள் உள்பட 49 எடையளவுகள் இயந்திரங்கள் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. ஜெயங்கொண்டம் வாரச் சந்தை வியாபாரிகள் பயன்படுத்தி வரும் எடையளவு இயந்திரங்களில், குறைபாடுகள் இருப்பதாக எழுந்த புகாரின் பேரில், துணை ஆய்வாளர் சரவணன், முத்திரை ஆய்வாளர்கள் சம்பத், பாலசுப்பிரமணியன், உதவி ஆய்வாளர்கள் உமாசங்கர், தேவேந்திரன், கண்காணிப்பாளர் ராஜசேகர் ஆகியோர் கொண்ட குழுவினர், ஜெயங்கொண்டம் வாரச் சந்தை வியாபாரிகளின் எடையளவு இயந்திரங்களை திங்கள்கிழமை சோதனை செய்தனர். சோதனையில், மறு முத்திரையிடாமலும், எடை குறைவாக பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டதையடுத்து 23 எலக்ட்ரானிக் தராசுள், 6 விட்டதராசுகள், 1 மேசைதராசு, 19 இரும்பு எடைகற்கள் என மொத்தம் 49 இனங்களை பறிமுதல் செய்தனர். அப்போது தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கா.மூர்த்தி கூறுகையில், எடைத்தராசுகளை பயன்படுத்தும் சந்தை வியாபாரிகள், கறிகடை மற்றும் மீன் வியாபாரிகள், வணிகர்கள் ஆண்டுக்கு ஒரு முறை எடையளவினை மறுபரிசீலனை செய்து மறுமுத்திரையிட்டு அரசு சான்றிதழ் பெற்று எடையளவுடன் வைத்திருக்க வேண்டும். தராசில் எடைமாற்றம் செய்து எடைகுறைவாக விநியோகம் செய்தால் சிறைதண்டனைக்கு ஆளாக நேரிடும். இனி வருங்காலங்களில் அரியலூர் மாவட்டத்தில் அனைத்து சந்தைகள், மீன் மார்கெட், கறிகடைகள் காய்கறி மார்கெட்டுகளில் இதுபோன்ற திடீர் ஆய்வுகள் அவ்வபோது நடத்தப்படும் என தெரிவித்தார்.
Next Story