ராமநாதபுரம் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் 494 பேர் கைது
Ramanathapuram King 24x7 |22 Jan 2025 4:38 AM GMT
மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தைச் சேர்ந்த 173 பெண்கள் உள்ளிட்ட 494 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தினர், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆந்திராவில் வழங்குவதுபோல் ரூ.6 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.15 ஆயிரம் என வழங்க வேண்டும், உதவித்தொகைக்காக ஒரு வருடமாக காத்திருக்கின்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக உதவித்தொகையை வழங்க வேண்டும், நூறு நாள் வேலைத்திட்டத்தில் வேலை கேட்டு விண்ணப்பித்த மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் நூறு நாள் வேலையும், நான்கு மணி நேர இலகுவான வேலை முழு ஊதியம் வழங்குவதை உறுதிப்படுத்திட வேண்டும் என்ற 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க தாலுகா தலைவர் நடராஜன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட செயலாளர் எம்.ராஜ்குமார், முன்னாள் மாவட்ட தலைவர் கல்யாணசுந்தரம் மற்றும் 15 பெண்கள் உள்ளிட்ட 49 பேரை பஜார் போலீஸார் கைது செய்தனர். இதேபோல் முதுகுளத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு தாலுகா செயலாளர் ராஜேஷ் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 97 பெண்கள் உள்ளிட்ட 238 பேரை போலீஸார் கைது செய்தனர். கடலாடி தாலுகா அலுவலகம் முன்பு தாலுகா செயலாளர் முகமது சுல்தான் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 25 பெண்கள் உள்ளிட்ட 80 மாற்றுத்திறனாளிகளை போலீஸார் கைது செய்தனர். கமுதி தாலுகா அலுவலகம் முன்பு தாலுகா செயலாளர் முருகேசன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 30 பெண்கள் உள்ளிட்ட 89 பேர் கைது செய்யப்பட்டனர். ராமேசுவரம் தாலுகா அலுவலகம் முன்பு தாலுகா செயலாளர் சீனிவாசன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்ளிட்ட 38 பேர் கைது செய்யப்பட்டனர். மாவட்டம் முழுவதும் 173 பெண்கள் உள்ளிட்ட 494 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
Next Story