சதுப்பேரிபாளையம் நிலத்தில் பயிர் நிலத்தில் எலிக்கு வைக்கப்பட்டிருந்த மருந்தினை சாப்பிட்ட 5 மயில்கள் இறந்தன.

X
ஆரணி அடுத்த சதுப்பேரிபாளையம் ஊராட்சியைச் சேர்ந்த சென்னானந்தல் கிராமத்தில் உள்ள நிலத்தில் எலிக்கு மருந்து தெளித்ததை சாப்பிட்ட 5 மயில்கள் இறந்தன. மேலும் ஒரு மயில் உயிருக்கு போராடிய நிலையில் கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்றனர். ஆரணி அடுத்த புலவன்பாடி கிராமத்தைச் சேர்ந்த சம்பத் மகன் பாண்டியன்(38) என்பவருக்கு சதுப்பேரிபாளையம் ஊராட்சியைச் சேர்ந்த சென்னானந்தல் கிராமத்தில் சொந்தமாக நிலம் உள்ளது. இதில் நெற்பயிர் வைத்துள்ளார். மேலும் நெற்பயிர்களை எலிகள் சேதப்படுத்தி வருவதால் எலியை சாகடிக்க மருந்து வைத்துள்ளனர். இப்பகுதியில் அதிகமான மயில்கள் வருவது வழக்கமாம். அதேபோல் திங்கள்கிழமையும் மயில்கள் வந்துள்ளது. எலிக்கு வைக்கப்பட்டிருந்த மருந்தினை 6 மயில்கள் சாப்பிட்டதாக தெரிகிறது. இதில் 5 மயில்கள் அதே இடத்தில் இறந்துள்ளது. ஒரு மயில் மட்டும் உயிருக்கு போராடிக்கொண்டுள்ளது. தகவலறிந்த வனச்சரக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மயில்களை மீட்டனர். மேலும் இறந்த 5 மயில்களை திருவண்ணாமலை வனச்சரக அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு போராடிய மயிலை சிகிச்சைக்கு கால்நடை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் இது குறித்து களம்பூர் காவல் நிலையத்தில் வனத்துறையினர் புகார் கொடுத்ததின்பேரில் களம்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story

