வாணியம்பாடி அருகே சிறுவனை கொலைசெய்த 5 பேர் கைது

வாணியம்பாடி அருகே சிறுவனை அடித்து கொலை செய்த நண்பர்கள் சடலத்தை தண்டவாளத்தில் வீசி சென்ற5 பேர் கைது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சிறுவனை அடித்து கொலை செய்த நண்பர்கள் சடலத்தை தண்டவாளத்தில் வீசி சென்று தலைமறைவான.. சிறுவன் உட்பட 5 பேரை ரயில்வே தனிப்படை கைது செய்து சிறையில் அடைத்தனர். முக்கிய குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி ரயில் தண்டவாளத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று உடல் இரண்டு துண்டான நிலையில் 17 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவன் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் வாணியம்பாடி அடுத்த அம்பலூர் பழைய காலனி பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் மகன் நரசிம்மன் (வயது16) என்பது தெரியவந்தது. இதனை அடுத்து தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது மகனுக்கும் அவரது நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் ரயில்வே இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் வழக்கு பதிவு செய்து சிறுவனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் உடற்குழாய்வில் சிறுவன் கழுத்து முறிக்கப்பட்டும், பின் மண்டையில் காயமும் இருந்ததால் கொலை செய்யப்பட்டு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அறிக்கையில் தெரிவித்தனர். இதனை அடுத்து ரயில்வே இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் தலைமையில் தனிப்படை அமைத்து, நரசிம்மனின் நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் சிகரல்லப்பள்ளி அருகே உள்ள தபால் மேடு பகுதியை சேர்ந்த அப்துல்லா என்பவரின் மகன் அப்துல் ரகுமான் (17) என்ற சிறுவனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இது குறித்து போலீசார் கூறுகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பைக் திருட்டு வழக்கில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு நரசிம்மன் மற்றும் இவரது நண்பர்களான பெங்களூரில் இருந்து வாணியம்பாடி அருகே உள்ள இராமநாயக்கன்பேட்டை பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வரும் பிரவீன் என்கிற டின், அம்பலூர் பகுதியை சேர்ந்த சுஜித் என்பவரின் மகன் அசோக் (24), சின்ன கல்லுப்பள்ளி பகுதியை சேர்ந்த சுப்ரமணி மகன் சீனிவாசன் (24), பெரியபேட்டை பகுதி சேர்ந்த பாலன் மகன் சிவா (18), செட்டியப்பனூர் பகுதியை சேர்ந்த சஞ்சீவி மகன் சத்யா (22) ஆகியோர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது நரசிம்மனை பேச்சுவார்த்தை கொடுத்து ரயில் தண்டவாள பகுதிக்கு அழைத்துச் சென்று சரமரியாக தாக்கி கழுத்தை இறுக்கி தலையின் பின்புறத்தில் அடித்து கொலை செய்துள்ளனர். பின்னர் நரசிம்மன் சடலத்தை ரயில் தண்டவாளத்தில் வைத்துவிட்டு சென்றுள்ளனர். இதனை அடுத்து இரவோடு இரவாக 24 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ததாக தெரிவித்தனர். மேலும் கைது செய்யப்பட்ட சிறுவன் உட்பட 5 பேரை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர். மேலும் முக்கிய குற்றவாளியான பிரவீன் என்கிற டின் என்பவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். வாணியம்பாடி அருகே இருசக்கர வாகன சம்பவத்தில் சிறுவன் ஒருவனை நண்பர்களே அடித்து கொன்று தண்டவாளத்தில் வீசிவிட்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story