ஓட்டல்கள் விவரம் தெரிவித்தால் பணம் தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி
சேலம் எடப்பாடியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 30). இவருடைய செல்போன் எண்ணுக்கு பிரபலமான ஓட்டல்களை கூறி அதன் விவரங்களை கூகுள் மேப் மூலம் டேக் செய்து, ரிவியூ மதிப்பெண் கொடுத்து அது குறித்த ஸ்கிரீன் சாட்டை அனுப்பினால் பணம் தருவதாக இருந்தது. இதை நம்பி அவர் ஒரு சில ஓட்டல்களின் விவரங்களை தெரிவித்து உள்ளார். அப்போது குறைந்த அளவு பணம் இவருடைய வங்கி கணக்கில் வந்து சேர்ந்தது. தொடர்ந்து ஓட்டல்கள் விவரம் கூறி உள்ளார். ஆனால் பணம் வரவில்லை. பின்னர் இவருடைய செல்போன் எண்ணுக்கு வந்த எண்ணில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்போது அதிகம் பணம் அனுப்ப வேண்டும் என்று கூறி உள்ளனர். இதை நம்பி பல தவணைகளில் ரூ.5 லட்சத்து ஆயிரத்து 650 அனுப்பி உள்ளார். ஆனால் இவருக்கு வரவேண்டிய பணம் வரவில்லை.பின்னர் குறுஞ்செய்தி வந்த எண்ணை தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் ஆகி இருப்பது தெரிந்தது. பின்னர் இது குறித்து அவர் சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி குறித்து விசாரணை நடத்தினர். அப்போது கேரளாவை சேர்ந்த 3 பேர் இந்த மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது. இதையடுத்து கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த அபிலாஷ் (42), வித்யாஷ், விபின் (33) ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
Next Story




