சேலத்தில் கஞ்சா விற்றதாக 5 பேர் கைது

சேலத்தில் கஞ்சா விற்றதாக 5 பேர் கைது
X
போலீசார் நடவடிக்கை
சேலம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுளா தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் ஆற்றோர மார்க்கெட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகத்தின்பேரில் நின்ற ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர், கொண்டலாம்பட்டி மார்க்கெட் தெருவை சேர்ந்த கணேசன் (வயது 25) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.24 ஆயிரம் மதிப்பில் ஒரு கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அவருக்கு கஞ்சா சப்ளை செய்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல், அம்மாப்பேட்டை இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையில் போலீசார் குமரன் தெரு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அம்மாப்பேட்டையை சேர்ந்த சுந்தரம் (42), கிச்சிப்பாளையம் கனகசுந்தரம் (23), நாமமலை காலனி முருகன் ஆகியோர் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.37 ஆயிரம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இரும்பாலை சப்-இன்ஸ்பெக்டர் கேசவன் தலைமையில் போலீசார் முருங்கப்பட்டி அரசு பள்ளி அருகே ரோந்து சென்றனர். அப்போது, சிவதாபுரம் பகுதியை சேர்ந்த கோகுல்ராஜ் (26) என்பவர் மாணவர்களுக்கு கஞ்சா விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து ரூ.2 ஆயிரத்து 500 மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Next Story