சேலம் அருகே சாய்பாபா, ஆஞ்சநேயர் கோவிலில் 5 ஐம்பொன் சிலைகளை மர்ம நபர்கள் கொள்ளை

X
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே மாசிநாயக்கன்பட்டி பைபாஸ் சாலையில் சாய்பாபா மற்றும் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூசாரி மற்றும் நிர்வாகிகள் வழக்கம்போல் பூஜையை முடித்துவிட்டு கோவில் கதவை பூட்டி சென்றனர். நேற்று காலை கோவிலின் நிர்வாகி பிரபாகரன் வந்து பார்த்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், சாமி அறையில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த 5 ஐம்பொன் சிலைகள், 2 வேல் ஆகியவற்றை மர்ம நபர்கள்கொள்ளையடித்து சென்றுள்ளனர். கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்து பணமும் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகி பிரபாகரன், அம்மாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், அரை அடி உயரம் உள்ள சாய்பாபா, ஆஞ்சநேயர் உள்ளிட்ட 5 ஐம்பொன் சாமி சிலைகள், 2 வேல் மற்றும் உண்டியல் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து தடய அறிவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளை சேகரித்தனர். மேலும், அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களில் மர்ம நபர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் அருகே சாய்பாபா, ஆஞ்சநேயர் கோவிலில் 5 ஐம்பொன் சிலைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story

