தந்தை, மகளை தாக்கியவருக்கு 5 ஆண்டு சிறை

X
குமரி மாவட்டம் சூரப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் வேலப்பன். (சம்பவம் நடந்த போது வயது 50). இவர் அப்பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார். கடந்த 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி இரவு அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ராதாகிருஷ்ணன் (சம்பவம் நடந்த போது வயது 38) என்பவர் கடைக்கு வந்தார். பின்னர் வேலப்பனிடம் சிகரெட் கேட்டார். சிரெட்டிற்கு வேலப்பன் காசு கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராதாகிருஷ்ணன் அவதூறாக பேசி உருட்டு கட்டையால் வேலப்பனை தாக்கினார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதை பார்த்த வேலப்பன் மகள் வினிஷா (அப்போது வயது 21) சண்டையை தடுத்துள்ளார். வினிஷாவையும் உருட்டு கட்டையால் தாக்கிய ராதாகிருஷ்ணன் இளம் பெண்ணின் தலை முடியை பிடித்து பொது இடத்தில் பெண்மைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துள்ளார். இது குறித்து வேலப்பன் வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை இரணியல் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் ரேவதி ஆஜராகி வாதாடினார். விசாரணைகள் முடிவடைந்த நிலையில் நீதிபதி சி. நரேந்திர குமார் நேற்று தீர்ப்பளித்தார். அதில் வேலப்பனை உருட்டு கட்டையால் தாக்கிய குற்றத்திற்காக ராதாகிருஷ்ணனுக்கு ஒரு வருட சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். அதேபோன்று வினிஷாவை உருட்டு கட்டையால் தாக்கிய குற்றத்திற்கு ஒரு வருட சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், பொது இடத்தில் பெண்மைக்கு கழங்கம் ஏற்படுத்தும் வகையில் இளம் பெண்ணிடம் நடந்து கொண்டதற்கு 3 வருட சிறை தண்டனையும் ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த தண்டனைகளை ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் கூறியுள்ளார். இதையடுத்து ராதாகிருஷ்ணனை அழைத்துச் சென்ற போலீசார் சிறையில் அடைத்தனர்.
Next Story

