சேலத்தில் முகநூல் மூலம் பழகி சித்தா டாக்டரிடம் ரூ.5 லட்சம் மோசடி

X
சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த 30 வயதான சித்தா டாக்டருக்கு கடந்த பிப்ரவரி மாதம் பேஸ்புக் (முகநூல்) மூலம் தேவிகா ஆனந்த் என்ற பெயரில் ஒருவர் அறிமுகம் ஆகியுள்ளார். பின்னர் இருவரும் பேஸ்புக்கில் தினமும் குறுஞ்செய்தி அனுப்பி பழகி வந்தனர். அந்த நபர் தனது வாட்ஸ்அப் நம்பரை கொடுத்ததால் இருவரும் கருத்துக்களை பரிமாறி வந்தனர். ஒரு கட்டத்தில் ஆன்லைன் டிரேடிங் தொழில் செய்து வருவதாகவும், அதில் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால் கூடுதல் தொகை கிடைக்கும் என்று ஆசை வார்த்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை உண்மை என்று நம்பிய சித்தா டாக்டர், அவர் அனுப்பிய இணையதள முகவரியில் முதற்கட்டமாக ரூ.6 ஆயிரம் முதலீடு செய்தார். அதற்கு அவரது வங்கி கணக்கில் ரூ.6,500 வந்து சேர்ந்தது. அதன்பிறகு ரூ.20 ஆயிரம் முதலீடு செய்ததால் அதற்கு ரூ.25 ஆயிரம் வந்துள்ளது. அதைத்தொடர்ந்து ரூ.5 லட்சத்து 10 ஆயிரம் வரை முதலீடு செய்துள்ளார். ஆனால் அதற்கான தொகை அவருக்கு திரும்ப வரவில்லை. இதனால் மோசடி செய்யப்பட்டதை அறிந்த சித்தா டாக்டர், இதுபற்றி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் ஹேமாவதி இந்த மோசடி தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story

